Breaking
Mon. Dec 23rd, 2024

சுகாதார பிரதி அமைச்சர் பைஸல் காசிம்  புத்தளம் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையானது மக்களை பிழையாக வழிநடத்தும் செயற்பாடு என்று புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினர் எஸ் .ஆர் .எம்.முஹ்ஸி தெரிவித்துள்ளார்.

புத்தளம் வைத்தியசாலையின் அபிவிருத்தி சபையின் உறுப்பினர் எனும் வகையிலும் , புத்தளத்தை பிறப்பிடமாக கொண்டவன் என்ற வகையிலும் இந்த வைத்தியசாலை அபிவிருத்தி தொடரபாக உண்மை நிலையை தெரியபடுத்த வேண்டியது எனது கடமையாகும்.

புத்தளம் வைத்திய சாலையில் 1200 படுக்கைகள் கொண்ட 6 மாடி கட்டிடம் அமைவதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தடையாக இருக்கிறார் என்பது முற்றிலும் பிழையான விஷமத்தனமான பிரச்சாரமாகும்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது புத்தளம் தள வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணித்து முடிக்க சுமார் 50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டினை வழங்கியிருந்தார்.  அதனால்  அவசர சிகிச்சைக்காக சிலாபம், கொழும்பு,  வைத்திய சாலைகளுக்கு நோயாளர்கள்

கொண்டு செல்லப்படும்  நிலை மிகவும் குறைவடைந்து புத்தளம் வைத்திய சாலையிலே சிகிச்சை பெறக்கூடிய  ஓர் உன்னத நிலை உருவாகியது. இதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அத்தோடு சுகாதார அமைச்சர் ராஜித அவர்களை புத்தளம் தள வைத்தியசாலைக்கு அழைத்து வந்து வைத்திய சாலையின் குறைபாடுகளை நேரில் கண்டறிவதற்கும், அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நடவடிக்கை எடுத்ததை எளிதில் யாரும் மறந்து விட முடியாது. இதனால் வைத்தியசாலைக்கு பிரதான திட்ட வரைவு  ( Master Plan) தயாரிக்கப்பட வாய்ப்பு கிட்டியது. இதன் மூலம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள உத்தரவு வழங்க சந்தர்ப்பம் உருவானது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன புத்தளம் வைத்தியசாலைக்கு வந்ததன் விளைவாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விடுத்த வேண்டுகோளை அடுத்து தற்போது இடம் பெறும் நிர்மாணப் பணிகளை இடைவிடாது முன்னெடுக்கவும், புதிதாக திருத்தப் பணிகளுக்காகவும் நிதி தடையுமின்றி கிடைத்ததை இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தமாகும்.  மாகாண சபைக்கு கீழ் புத்தளம் தள வைத்தியசாலை இருந்தும் இவ்வாறான அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மூலமே. அவரின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் நவவியும் இணைந்து பணியாற்றியமை இந்த சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூரத்தக்கது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வடமேல் மாகாண சுகாதார அமைச்சரிடம் “தாதியர்கள் நியமனங்களை வழங்குகிறேன். அவர்களை புத்தளத்துக்கு முதலில் வழங்குங்கள்” என்று கூறியதையும் நினைவுபடுத்துவது சாலச் சிறந்தது. வைத்தியர் நியமனங்கள், மருத்துவ உபகரணங்களையும்  வழங்க சுகாதார அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததும் இந்த விஜயத்தின் போது தான்.

பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட சுகாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டு விவாதத்தில் கூட அமைச்சர் ரிஷாத் பதியுதீன் புத்தளம் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் சுட்டிக் காட்டி அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் நிதியொதுக்க கோரிக்கை விடுத்தார்.  சுகாதார அமைச்சில் சந்திப்பினை செய்து புத்தளம் வைத்தியசாலை அபிவிருத்திக் குறித்து சுகாதார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இவ்வாறு புத்தளம் வைத்தியசாலைக்கு தன்னால் முடிந்த வரை உதவிய, மேலும் உதவுவதற்கு செயற்பட்டு வரும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் புத்தளம் வைத்தியசாலை அபிவிருத்திக்கு தடையாக இருக்கிறார் என்பது காழ்ப்புணர்வுடன் சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிமினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. இதற்கு பின்னராவது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என புத்தளம் வைத்தியசாலையின் முன்னேற்றத்தில் சதாவும் அக்கறையுடன் செயற்படுபவன் என்ற ரீதியில் தெரிவித்துக் கொள்கிறேன்.

(இஹ்சான் பைரூஸ்)

Related Post