தனது காதலி ரீவா ஸ்டீன்கெம்ப்பை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மாற்றுத்திறனாளி ஒலிம்பிக் தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸுக்கு தென் ஆபிரிக்கா மேன்முறையீட்டு நீதிமன்றம் 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் தனது குடும்பத்தினரை ஆரத்தழுவிய 29 வயதான பிஸ்டோரியஸ் பின்னர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் சமூக அக்கறைகள், பாதிக்கப்பட்ட ஸ்டீன் கேம்ப் குடும்பத்தின ரின் மன உளைச்சல், பெருகி வரும் கொலைக் குற்றங்கள், மற்றும் கொலைக் குற்றவாளிகளுக்கான மறு வாழ்வு உள்ளிட்ட பல விடயங்களை பரிசீலிக்க நேரிட்டதாக நீதி பதி தொக்கோசைல் மசீபா தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு இதே நீதிபதி மசீபா இந்த வழக்கில் பிஸ்டோரியஸ் மீதான குற்றச்சாட்டுகள் அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்படவில்லை என்று அவரை விடுவித்தார். ஆனாலும் மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ததாக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
சிறையில் ஓரா ண்டு கழித்த பிஸ்டோரியஸ் பிணை யில் வெளியே வந்து தென் ஆபிரிக்க உச்ச நீதிமன்றத்தில் தனது தண்டனையைக் குறைக்கக் கோரி மேன்முறையீடு செய்தார். இந்த மேன்முறையீட்டு வழக்கில் பிஸ்டோரியஸ் கொலைக் குற்றவாளி என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
மாவட்ட நீதிமன்றம் இந்தத் தண்டனை மீதான வாதம் ஜூன் 13 முதல் ஜூன் 17 வரை நடைபெற்றது. இந்த வாதங்களில் பிஸ்டோரியஸுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க அரசு தரப்பு வலியுறுத்தியது.
இந்நிலையில், நீதிபதி, பல்வேறு காரணிகளை கவனத்தில் கொள்வதாகக் கூறி 6 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.