நிதி மோசடி காரணமாக தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு தடைக்குள்ளான செப் பிளட்டருக்குப் பதிலாக சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனத்திற்கு (ஃபீஃபா) புதிய தலைவர் ஒருவர் இன்று தெரிவு செய்யப்படவுள்ளார்.
சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள ஹோலென்ஸ்டியன் அரங்கில் நடைபெறவுள்ள ஃபீஃபாவின் அதிவிசேட பொதுக்கூட்டத்தின் போது இத் தேர்தல் நடைபெறவுள்ளது.
செப் பிளட்டருக்கு எதிராக நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் ஆரம்பமானதை அடுத்து ஃபீஃபா செயற்பாடுகளில் பங்குகொள்ளமுடியாதவாறு அவருக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் எட்டு வருடத்தடை விதிக்கப்பட்டது.
வேட்பாளர்கள் ஜியானி இன்ஃபன்டீனோ (45 வயது, சுவிட்ஸர்லாந்து, ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் ஒன்றிய பொதுச் செயலாளர்),டோக்கியோ செக்ஸ்வேல் (62 வயது, தென் ஆபிரிக்கா, ஃபீஃபா பாகுபாட்டுக்கு எதிரான நடவடிக்கை படை), ஜெரோம் சேம்பாஞே (57 வயது, பிரான்ஸ், ஃபீஃபாவின் முன்னாள் செயலாளர்நாயகம்),இளவரசர் அலி பின் ஹுசெய்ன் (40 வயது, ஜோர்தான், ஃபீஃபாவின் முன்னாள் உதவித் தலைவர், தலைவர் பதவிக்கான முன்னாள் வேட்பாளர்), ஷெய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் காலிஃபா (50 வயது, பாஹ்ரெய்ன், ஃபீஃபா உதவித் தலைவர், ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளனத் தலைவர்)
இத் தேர்தலில் ஜியானி இன்ஃபன்டீனோ, ஷெய்க் சல் மான் பின் இப்ராஹிம் அல் காலிஃபா ஆகிய இருவருக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என சர்வதேச கால்பந்தாட்ட விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இன்ஃபன்டீனோவுக்கு ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்க ஆதரவு இருப்பதாகவும் சல்மானுக்கு ஆசிய, கடல்சூழ் பிராந்திய மற்றும் பல தென் ஆபிரிக்க நாடுகளின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் ஃபீஃபாவில் அங்கம் வகிக்கும் இலங்கை உட்பட 209 நாடுகளின் பிரதிநிதி ஒரு வாக்கு வீதம் அளிக்க அனுமதிக்கப்படுவர்.
போட்டியிடுபவர்களில் ஒருவருக்கு முதலாவது வாக்களிப்பில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்தால் அவர் தலைவராகத் தெரிவாவார்.
மூன்றிலிரண்டு அதாவது 139 வாக்குகளை ஒருவர் பெறத் தவறினால் முதலிரண்டு இடங்களில் இருப்பவர்களுக்கு இடையில் இரண்டாம் சுற்று வாக்களிப்பு நடத்தப்படும்.
ஆபிரிக்கா (54 வாக்குகள்), ஐரோப்பா (53), ஆசியா (46), வட மற்றும் மத்திய அமெரிக்கா (35), கடல்சூழ் பிராந் தியம் (11), தென் அமெரிக்கா (10) ஆகிய வலயங்களிலுள்ள நாடுகளின் கால்பந்தாட்ட சங்கத் தலைவர்கள் வாக்களிப்பர்.
இலங்கை சார்பாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் அநுர டி சில்வா வாக்களிக்கவுள்ளார்.
அவருடன் செயலாளர் அன்தனி பாலேந்திரா, முன்னாள் தலைவர் ரஞ்சித் ரொட்றிகோ ஆகியோர் சுவிட்ஸர்லாந்து சென்றுள்ளனர்.