தென்னிந்திய தவ்ஹீத் புரட்சியாளர் பீ ஜே இலங்கை வருவதில் இலங்கை முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜமிய்யத்துல் உலமாவின் கடித தலைப்பில் மௌலவி அல்லாத ஒரு ஊழியர் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டிருப்பது உலமாக்களை அவமானப்படுத்தும் செயல் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
மேற்படி அறிக்கையில் ஜமிய்யத்துல் உலமாவின் நிர்வாகத்தில் சம்பளத்துக்கு பணி புரியும் ஆதம் அலி என்பவர் கையொப்பமிட்டுள்ளார். மிக முக்கியமான இந்த விடயத்தில் உலமா சபையின் தலைவரோ, செயலாளரோ, பத்வாக்குழுவோ அல்லது ஒரு மௌலவியாவது கையொப்பமிடாமல் மௌலவி அல்லாத அதுவும் சம்பளத்துக்கு வேலை செய்பவரின் பெயரில் அறிக்கை வெளியானது ஏன் என்பதை உலமா சபை பொது மக்களுக்கு தெரியப்படுத்த் வேண்டும்.
இவ்வறு நடந்ததன் மூலம் இது உலமா சபை மௌலவிகளுக்கு தெரியாமல் நடந்ததா அல்லது தாம் தப்புவதற்காக ஆலிம் அல்லாத சம்பள ஊழியர் பகடைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளாரா? பீ ஜே விடயத்தில் சமூகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சொல்லும் ஜம்மியத்துல் உலமாவின் செயலாளர் இலங்கை தவ்ஹீத்வாதிகளின் மேற்பார்வையாளராக இருக்கின்றார்.
அதன் உதவிச்செயலாளர் தவ்ஹீத் இயக்கமான ஜமிய்யத்துஷ்ஷபாபின் உப தலைவராக இருக்கின்றார். இவர்களும் தவ்ஹீத்வாதியான பீ ஜேயை மறுக்கின்றார்களா? அல்லது உலமா சபையின் ஊழியர் பின்னால் மறைந்து கொண்டுள்ளார்களா? என்ற கேள்விகளுக்கான பதில்கள் மர்மமாக உள்ளன. ஆகவே இவை பற்றி உலமா சபை இலங்கை முஸ்லிம்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என முஸ்லிம் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.