புகைப்பிடித்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகையிலை நிறுவனங்கள் 12.4 பில்லியன் டாலரை இழப்பீடாக கொடுக்க வேண்டும் என கனடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த இழப்பீடு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 79 ஆயிரத்து 155 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இம்பீரியல் டொபேக்கோ, ரோத்மன்ஸ் பென்சன் அண்ட் ஹைட்ஐஸ் மற்றும் ஜே.பி.ஐ. மென்டொனால்ட் ஆகிய சிகரெட் நிறுவனங்கள் மீது இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் 1998-ம் ஆண்டு புகைப்பிடிப்பதால் வரும் உடல்நலக் கேடுகளுக்கு பற்றி தனது தயாரிப்புகளில் விளம்பர வாசகம் மூலம் சொல்லாததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகையிலை நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது. மேலும் அதில் கியூபெக் பகுதியில் சிகரெட் பிடிப்பதால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காசநோய், தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோயால், பாதிக்கப்பட்டுள்ளனர் என புகார் கூறப்பட்டிருந்தது. ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் தான் அந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. விசாரணையின் முடிவில் புகையிலை நிறுவனங்கள் 12.4 பில்லியன் டாலரை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாணத்தில் புகைப்பிடித்ததால் பாதிக்கப்பட்டுள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை எப்படி பிரித்துக்கொடுப்பது என்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
நடைமுறை சாத்தியங்களை புறக்கணித்து விட்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள புகையிலை நிறுவனங்கள் மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளன.
ஒரு வழக்கில், கனடா நாட்டு வரலாற்றில் இந்த அளவுக்கு பெரிய அபராத தொகை தண்டனையாக விதிக்கப்பட்டதில்லை. இதுதான் முதல் முறையாகும்.