நாடு முழுவதும் புதிதாக சுமார் 172 பொலிஸ் நிலையங்கள் உருவாக்கப்படவுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குருநாகல், வெல்லவ பொலிஸ் நிலையத்தை நவீனமயப்படுத்தி திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சாகல ரத்நாயக்க,
நாட்டில் தற்போதைக்கு 428 பொலிஸ் நிலையங்கள் செயற்படுகின்றன. இதனை 600 பொலிஸ் நிலையங்கள் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.
பொலிசாருக்கு நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட விசாரணை முறைகள் தொடர்பில் போதுமான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொலிசாரின் அடிப்படை சம்பளம் நாற்பது வீதத்தால் அதிகரிக்கப்படும். பதவி உயர்வுகளும் உரிய நேரத்தில் வழங்கப்படும்.
பொலிஸ் பயிற்சிக் கல்லூரிகளையும் நவீனமயப்படுத்தவும், அவற்றின் வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.