Breaking
Wed. Dec 25th, 2024

* 13ஆவது திருத்தம் ஒற்றையாட்சிக்கு உட்பட்டதே
* வெளிநாட்டு, உள்நாட்டு சவால்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும்
* அரசியலமைப்பு திருத்தத்துக்கு சகல கட்சிகளும் ஒத்துழைப்பது அவசியம்

அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு நாட்டின் ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாகவே இருக்கும். 13 ஆவது திருத்தச் சட்டமும் அதற்கு உட்பட்டதாகவே இருக்கிறது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு வெளியில் இல்லாமல் பாராளுமன்றத்தினுள்ளேயே பிரச்சினைக்கான தீர்வு காணப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

அத்துடன் 18 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழித்து 19 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுவதுடன் எதிர்வரும் 29 ஆம் திகதி இடைக்கால வரவு – செலவுத் திட்டம் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மக்களுக்கு அதிகளவு நிவாரணங்கள் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அரசின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நேற்று பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது.

இதன்போது பிரதமர் தமது விசேட உரையை நிகழ்த்தினார். பிரதமர் தனது உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இன்று இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள். இந்த நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கும் ஒழுக்கமான ஒரு அரசை உருவாக்கவும் வழியேற்பட் டுள்ளது. 100 நாட்களில் புதிய நாட்டை கட்டியெழுப்புவதற்கான ஒரு அடித்தளத்தை ஆரம்பிக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் ஆணையை வழங்கியிருக்கிறார்கள்.

இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றிகளை தெரிவிப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்.

மக்கள் ஆணையுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முழுமையான ஆதரவு மட்டுமல்ல தலைமைப் பதவியும் அவருக்கு உரித்தானது.

இந்த பாராளுமன்றமும் இலங்கை வரலாற்றில் விசேடமான பாராளுமன்றமாகிறது. நாட்டின் இரு பிரதான கட்சிகள் மட்டுமல்ல ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஒரே நோக்கத்திற்காக ஒரு பொதுவான பயணத்துக்கு புறப்படுவதும் இந்த பாராளுமன்றத்தினுள் இருந்துதான்.

இதுவரை நாம் அனைவரும் முகம் கொடுத்திராத புதிய ஒரு சந்தர்ப்பமாகவே இதை கருதுகிறேன். எனவே, இந்த பயணத்தை திட்டமிட்டபடி நிறைவு செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றாக செயற்பட வேண்டும்.

இது ஒவ்வொருவரும் தனித்தனியாக பயணிக்கும் பயணம் அல்ல. நாட்டிற்காக நாம் அனைவரும் ஒருமித்து செல்லும் பயணம்.

இன்று எமது நாடு மிகவும் பல மிழந்த நிலையில் உள்ளது. பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக பலத்த நெருக்கடிகளுக்குள் நாம் சிக்கி இருக்கிறோம்.

தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பல சவால்களுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

நாம் இந்த சவால்களை வெற்றி கொள்ள வேண்டும்.

100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற வேண்டிய சட்டங்கள் சில உள்ளன.

நிறைவேற்று அதிகாரத்துக்குப் பதிலாக அமைச்சரவையின் ஊடாக பாராளுமன்றத் துடன் கூடிய நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட அரசு முறையொன்றை உருவாக்குதல்.

18 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழித்து சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவும் விதத்தில் 19 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருதல்.

* தேசிய ஒளடத கொள்கைச் சட்டத்தை சமர்ப்பித்தல்.

* தேசிய கணக்காய்வு சட்டத்தை சமர்ப்பித்தல்.

* தகவல் அறியும் சட்டத்தை கொண்டுவருதல்.

தகவல் அறிதல் சட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களும் சில ஆலோச னைகளையும் முன்வைத்திருக்கிறார்கள். குறிப்பாக மேற்குறிப்பிட்ட சட்டமூலங்கள் அனைத்தும் ஆயத்த நிலையிலேயே உள்ளன.

இவற்றை நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறான சட்டங்கள் பல்வற்றை நாம் நிறைவேற்ற வேண்டியுள்ளது. இதேபோன்ற கடற்றொழில், நீரியல் வள அபிவிருத்தி சட்டத்திலும் திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது.

இவை பாராளுமன்றத்தில் சமர்ப்பி த்ததன் பின்னர் உங்கள் அனைவரினதும் ஆலோசனைகளுடன், பங்களிப்புடன் மேலும் பலமடையச் செய்ய ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். இவற்றுக்கு உங்கள் அனைவரினதும் ஆலோசனைகள் தேவை என்பதையும் கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் இந்த பாராளுமன்றத்தில் மேற்பார்வைக்கென தெரிவுக்குழுவொன்றை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்தாத உறுப்பினர்கள் மற்றும் சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இக்குழுக்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

எதிர்வரும் 29ம் திகதி இடைக்கால வரவு – செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இதனூடாக மக்களுக்கு பெருமளவிலான நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்பாக உங்கள் அனைவரினதும் ஆலோசனைகள், கருத்துக்கள், விமர்சனங்கள் போன்றவற்றை நாம் விசேடமாக எதிர்பார்க்கிறோம்.

எமது பாராளுமன்ற சம்பிரதாயத் தை பாதுகாக்கவும் பலப்படுத்தவும் உங்கள் அனைவரினதும் தொடர் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்பதை நான் இங்கு புதிதாக கூறத்தேவையில்லை என்று நினைக்கிறேன்.

எமக்கு சர்வஜன வாக்குப் பலம் கிடைத்தது, இன்று நேற்றல்ல. காலனித்துவ காலத்திலிருந்துதான் கிடைத்தது. மேல் சபைக்கு அன்று அதிகளவு அதிகாரங்கள் இருந்தன. இதேபோன்று எமது பாராளுமன்றத்துக்கும் அதிகளவு அதிகாரங்கள் இருந்தது.

எனினும் கடந்த காலங்களில் பாராளுமன்றம் நகைப்புக்கு இலக்காகி பொருட்படுத்தாத ஒன்றாக கருதப்பட்டது என்பதை நாம் அறிவோம். பாராளுமன்றத் துக்கே உரிய உண்மையான அதிகாரம் இருக்கவில்லை. பாராளுமன்றத்துக்குரிய நிதி அதிகாரம் உட்பட சகல அதிகாரங்களும் கரைந்து போயிருந்தன.

பாராளுமன்றம் ஒரு திரையாகவே காணப்பட்டது. சில வேளைகளில் பாராளுமன்றத்தை அலங்காரப் பொருளாக கருதினார்கள்.

எனினும் பாராளுமன்றத்தை முழு அதிகாரங்களையும் கொண்ட சபையாக ஆக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது எமது கடமை.

அத்துடன் உங்கள் அனைவரினதும் அபிலாஷை என்ன என்பதையும் அறிவேன். எனவே, பாராளுமன்றத்தை மீண்டும் பலப்படுத்தும் முயற்சிக்கு ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறேன்.

பாராளுமன்றத்தை அரச நிர்வாகத்துக்கு முழுமையாக பயன்படுத்துவதே எமது நோக்கமாகும்.

எமது நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு ஒழுக்கமான அரசை நிர்மாணிக்க குடும்ப ஆதிக்கத்துக்குப் பதிலாக மக்களின் ஆதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஊழல், மோசடிகள் அற்ற நல்லாட்சியை உருவாக்குவதற்கும் ஜனநாயகத்தையும், ஜனநாயக ரீதியான நிறுவனங்களை பலப்படுத்துவதற்கும் கடந்த தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந் தார்கள்.

இதேபோன்று கடந்த தேர்தலின் போது அரசியல் கட்சிகள். சமூக அமைப் புகள், குழுக்கள் தனிப்பட்ட நபர்கள் அனைவரும் கைகோர்த்து ஒரு பொதுவான இலக்குக்காக செயற்பட்டனர்.

இந்த எண்ணத்தை ஈடேற்றிக் கொள்வதற் காக இந்த போராட்டத்தில் சிலர் உயிர்த்தியாகம் செய்தார்கள். சொத்துக்களை இழந்தார்கள்.

அச்சுறுத்தல்களுக்கு உள்ளானார்கள். அரச ஊடகங்களின் அழுத்தங்களுக்கு உள்ளா னார்கள்.

எனினும் பல்வேறு அரசியல் கொள்கைகள் இருந்தாலும் பொது சமூக நோக்குக்காக செயற்பட்ட அனைவரும் அச்சமின்றி தொடர்ந்தும் தமது போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

அரச அதிகாரம், வன்முறை, பண பலம் என்பவற்றுக்கு பதிலாக மக்கள் பலம் உயர்ந்தது என்பதை இந்த போராட்டம் நிரூபித்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் மக்களின் ஆணையை செயற்படுத்துவதே எமது பொறுப்பாகும்.

எமது கட்சி வேறு, கொள்கைகள் வேறு, எமது நோக்கு வேறு எனினும் பொதுவான ஒரு இலக்கிற்காக கை கோர்த்துக் கொண்டோம். பல நிறங்களைக் கொண்ட வானவில்லாக நாம் ஒன்றிணைந்துள்ளோம்.

எமது அரச நிர்வாகத்தின் போது ‘லிஜ்ஜா’ சாம்ராஜ்ய சம்பிரதாயத்தையே கடைப்பிடிக்க இருக்கின்றேன். பலவிதமான கருத்துக்கள் இருந்த போதும் நாம் ஒற்றுமையாக கூடுவோம். ஒற்றுமையுடன் பேசுவோம். ஒற்றுமையாக பிரிந்து செல்வோம். இணைந்து நாட்டை நிர்வகித்துச் செல்வோம்.

எனவே இந்த சபையில் இருக்கின்ற அனைத்து உறுப்பினர்களிடமும் நான் கேட்பது இந்த அழகான பல நிறங்களுடன் கூடிய வானவில்லுக்கு உங்கள் எண்ணங்களையும் சேர்க்குமாறும் கேட்கின்றேன். உங்களது கருத்துக்களால் எண்ணங்களால் இந்த அழகிய வானவில்லை இன்னும் அழகாக்குமாறும் கேட்கிறேன்.

நாம் சர்வாதிகார குடும்ப ஆதிக்க ஆட்சியில் வரட்சியால் காய்ந்து வெடிப்புக்களுக்கு உள்ளான நிலம் போல எமது நாட்டுக்கு ஜனநாயகத்தின் மழையை பெய்யச் செய்வோம்.

இந்த ஜனநாயகம் மழை நீரில் பூக்கும். எமது நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை விதைப்போம்.

-Thinakaran-

Related Post