Breaking
Wed. Dec 25th, 2024

-நிந்தவூர் ஷிப்லி-

இலங்கையின் அண்மைக்கால அரசியல் மாற்றங்களைக்கடந்து புதிய ஜனாதிபதி அதிமேதகு மைத்ரிபால சிறிசேன அவர்களின் “100 நாட்களில் புதிய தேசம்” என்னும் எல்லைக்குள் நுழைந்திருக்கிறோம். அவரது வாக்குறுதிகளுக்கு அமைவாக இன்று புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மொத்தமாக 27 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 10 இராஜாங்க அமைச்சர்களும்,  09 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து அமைச்சர்களும் தகுதிவாய்ந்தவர்களாகவும், பொருத்தமானவர்களாகவும் தெரிவுசெய்யப்படடுள்ளமை ஜனாதிபதியின் தெளிவான பாதையை நமக்கெல்லாம் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இதில் இராஜாங்க அமைச்சர்களுள் ஒருவராக கௌரவ பேராசிரியர், எழுத்தாளர் ரஜீவ விஜயசிங்க அவர்கள் உயர்கல்விக்கான புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பற்றிய சிறு கண்ணோட்டமே இப்பதிவு.
1954 ம் ஆண்டு மே மாதம்  16 ம் திகதி பிறந்த பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க ஆரம்பக்கல்வியை கல்கிஸ்ஸ சென்.தோமஸ் கல்லூரியில் கற்றுக்கொண்டிருந்தபோது University College, Oxford இல் கல்வி கற்பதற்கான வாய்ப்பினை தனது 16 வது வயதில் பெற்றுக்கொண்டார். மொழியியலில் தனது கலைப்பட்டத்தை தொடர்ந்து 1977 இல் முதுமானிப்பட்டத்தையும் நிறைவு செய்தார். அதன்பின்பு Corpus Christi College, Oxford கல்லூரியில் தனது கலாநிதிப்பட்டத்தை பூர்த்தி செய்தார். கலாநிதிப்பட்டத்துக்காக அவர் எழுதிய “Women and Marriage in the early Victorian” நாவலானது University Press of America  வினால் “The Androgynous Trollope” என்ற பெயரில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சின் ஆங்கில மொழி மூலக்கல்விக்குழுவின் ஆலோசகராக 2001 இல் அரும்பணியாற்றியிருந்த அமைச்சர், ஆங்கில மொழி மூல பாடத்திட்டங்களை பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் அறிமுகம் செய்து வைப்பதில் கணிசமான பங்களிப்பினை வழங்கியிருந்தார் என்பது நவீன கல்வி மாற்றங்களை அப்போதே அவர் கணித்திருந்தார் என்பதற்கு நல்ல சான்றாகும்.
ஆங்கில இலக்கியத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்த இவர் “Liberal Review” என்னும் அரசியல் சஞ்சிகையின் இணை ஆசிரியராக பணிபுரிந்திருக்கிறார். மேலும் Liberal Party of Sri Lanka கட்சியின் தலைவராக 1987 இல் நியமிக்கப்பட்ட அதேவேளை 1999 ம் ஆண்டில் ஜனாதிபதி வேட்பாளராகவும் அதே கட்சியினால் நிறுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லதொரு எழுத்தாளராக அறியப்பட்ட இவர் ஆங்கில மொழி மூலமான ஆக்கங்களை அதிகம் ஊக்கப்படுத்தியிருந்தார். ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்களை புனைந்த முதலாவது இலங்கையர் என்னும் பெருமையும் இவரைச்சாரும். இத்தாலிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இவரது “Servi” எனும் நாவலானது Gratiaen  விருதை 1995 இல் வென்றமை விசேட அம்சமாகும்.
பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க அவர்கள் Journal of Commonwealth Literature என்னும் சஞ்சிகையின் எழுத்தாளர் குழுவில் தற்போதும் அங்கம் வகித்து வருவதோடு, The Foundations of Modern Society,  Political Principles and their Practice in Sri Lanka மற்றும்  A Handbook of English Grammar போன்ற நூல்களிலும் பங்களிப்புச்செய்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இவர் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியராக பணியாற்றிய நிலையில் 2007 ம் ஆண்டுக்குப்பின்னர் அரசியலில் மீள் பிரவேசம் செய்து 2010 ம் ஆண்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி, இன்று நாட்டின் முதுகென்பாகத்திகழும் உயர்கல்வி அமைச்சர் என்னும் உயரிய அந்தஸ்தைப்பெற்றுள்ளார்.
உண்மையில் மிகப்பொருத்தமான ஒருவரை உயர்கல்வி அமைச்சராக நியமித்துள்ளமை இன்றைய அரசாங்கத்தின் வினைத்திறனான வளப்பகிர்வை துல்லியமாக எடுத்துரைக்கும் அதேவேளை உயர்கல்வித்துறைக்கு ஒரு சிரேஸ்ட பேராசிரியரை நியமித்துள்ளமை இத்துறையின் அபரிதமான வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமையும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

Related Post