எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கும் நோக்கில் மஹிந்த அணியானது புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக இது தொடர்பான கலந்துரையாடல்கள் கடந்த வாரமும் இடம்பெற்றதாகவும் நாளை செவ்வாய்க்கிழமையும் நடைபெறவுள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ குறிப்பிடுகையில் எனது கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சியாகும். நான் மட்டுமே சுதந்திரக் கட்சியிலிருந்து விலகாமல் இருக்கின்றேன். சுதந்திரக் கட்சியை நான் மட்டுமே காட்டிக்கொடுக்கவில்லை. பலர் தமது கட்சிகளை காட்டிக்கொடுத்துள்ளனர். ஆனால் நாங்கள் அதனை செய்யவில்லை. அவ்வாறு செய்யவுமாட்டோம்.
ஆனால் தற்போதைய நிலைமைகளை பார்க்கும்போது புதிய கட்சி ஒன்று வராது என்று கூற முடியாத நிலை காணப்படுகின்றது. குறிப்பிட்ட தரப்பினர் கட்சியிலிருந்து புறக்கணிக்கப்பட்டால் அவர்கள் வேறு எங்காவது செல்லவேண்டியேற்படும். அவர்கள் புதிய கட்சியை உருவாக்கலாம். எனவே புதிய கட்சிகள் வரலாம் என்றார்.