காலி, மல்ஹறுஸ் ஸுல்ஹிய்யா மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தொழில்நுட்ப பீடத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாணவர்களிடம் கையளித்தார்.
அறிவை மையமாகக் கொண்ட அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்காக ஆரம்ப பாடசாலைகள் மற்றும் இரண்டாம் நிலைப் பாடசாலைகளை மீள்நிர்மாணிக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் இத்தொழில்நுட்ப பீடம் இப்பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை பாடசாலை மாணவர்கள் ஆரவாரமாக வரவேற்றனர்.
அதன் பின்னர் பெயர்பொறி கல்லினை திரைநீக்கம் செய்து புதிய தொழில்நுட்ப பீடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, அங்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார்.
கடந்த ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தொழில்நுட்ப பாடத் துறையில் காலி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட மல்ஹரஸூலியா மத்திய கல்லூரி மாணவி எம்.என்.பாரா நிபிலா ஜனாதிபதியினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தென்மாகாண ஆளுனர் ஹேமகுமார நானாயக்கார, முதலமைச்சர் ஷான் விஜயலால் த சில்வா, அமைச்சர் வஜிர அபேவர்தன, பிரதி அமைச்சர் மனுஷ நானாயக்கார, மாகாண அமைச்சர் சந்திம ராசபுத்திர, கல்லூரி அதிபர் ஐ.எம்.எம். யூசுப் உள்ளிட்ட ஆசியரியர் குழாம், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
அத்துடன் காலி டெல்பட் டவுன் நடைபாதை வியாபாரிகளுக்காக 10.4 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சிறிய அளவிலான முயற்சியான்மை வியாபாரத் தொகுதியும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 28.4 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தடல்ல பியதிகம வாராந்த சந்தையினை திறந்து வைக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.