வற் வரியில் இடம்பெற்றுள்ள தவறுகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே நாட்டில் நிலையான அபிவிருத்தி ஏற்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டு புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும். அதில் தேசிய உணவு உற்பத்திக்கு சலுகை வழங்க வேண்டும் என அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.
‘தேசிய நுகர்வோர் வலையமைப்பு’ எனும் அமைப்பு இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. அது தொடர்பில் தெளிவுறுத்ததும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. அதன் மூலம் பெருமளவிலான செலாவணி வெளிநாடுகளுக்குச் செல்கின்றன. எனினும் அவ்வாறு பெருந்தொகை பணம் செலுத்தி பெறப்படும் உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானதாக இல்லை. இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களிலுள்ள இரசாயன பதார்த்தங்களால் ஏராளமான நோய்கள் ஏற்படுகின்றன.
எமது நாட்டில் மூன்றில் ஒரு பகுதியினர் நோய்வாய்ப்பட்டிருக்கின்றனர். அதனால் சுகாதாரத் துறைக்கு அதிகளவிலான நிதியினை ஒதுக்க வேண்டியுள்ளது. அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சிறுநீரக மற்றும் புற்றுநோய்களுக்கு உணவுப் பொருட்களிலுள்ள இரசாயனப் பதார்த்தங்களே ஏதுவாக அமைகின்றன. இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு வரிகளை விதிப்பதுடன் தேசிய உணவு உற்பத்திக்கு சலுகை வழங்கும் வகையிலான பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்த வேண்டும்.
மேலும் நுகர்வோருக்கு உரிய முறையில் பொருட்களையும் சேவையையும் வழங்க வேண்டும். தற்போது அந்நடவடிக்கை மந்த கதியிலேயே இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. நுகர்வோரும் தமது உரிமைகள் பற்றி தெளிவில்லாமல் இருக்கின்றனர். அதனால் வணிக நிறுவனங்கள் தமது வசதிகளுக்கு ஏற்ப விலையினையும் சேவையினையும் முன்னெடுப்பதனை அவதானிக்க முடிகிறது. ஆகவே நுகர்வோரின் உரிமைகள் பற்றி மக்கள் தெளிவூட்டப்பட வேண்டும். முன்னைய காலங்களில் மக்கள் பொருட்களின் விலை தொடர்பில் மாத்திரம் அவதானம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் தற்போது பொருட்களின் தன்மை, தரம் பற்றியும் அதிக கரிசனை காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இரசாயனப் பதார்த்தங்கள் கலக்காத உணவுப்பொருட்களை அதிக விலை கொடுத்தே கொள்வனவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆகையினால் இரசாயன பதார்த்தங்கள் கலக்காத உணவினை செல்வந்தர்கள் மாத்திரம் உட்கொள்கிறார்கள். அவ்வாறு அதிக விலை கொடுக்கின்ற போதிலும் அது இரசாயனப் பதார்த்தம் கலக்கப்படாத உணவுப் பொருட்களா என்பதை உறுதிப்படுத்துவதிலும் சிக்கல் உள்ளது.
எனவே பொருட்களின் விலை, சேவை மற்றும் அதன் தரம் பற்றிய தெளிவினை ‘தேசிய நுகர்வோர் வலையமைப்பு மக்களுக்கு வழங்கவுள்ளது. அத்துடன் இரசாயனப் பதார்த்தம் கலக்காத உணவுப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து அதனை உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்று குறைந்த விலையில் நுகர்வோரை சென்றடையும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. நாளை (இன்று) நடைபெறவுள்ள ‘தேசிய நுகர்வோர் வலைய
மைப்பு’ அங்குரார்ப்பண நிகழ்வில் இரசா யனப் பதார்த்தம் கலக்காத அரசி ஒரு கிலோ கிராம் 120 ரூபாவுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.