Breaking
Mon. Dec 23rd, 2024

அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான குறைநிரப்பு பிரேரணையொன்று, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதியமைச்சர்கள் மூவர், தங்களுக்கு அந்த வாகனங்கள் தேவையில்லை என்று அறிவித்துள்ளனர்.

பிரதியமைச்சர்களான ரஞ்சன் ராமநாயக்க, பாலித்த தெவரப்பெரும மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோரே, தங்களுக்கு புதிய வாகனங்கள் தேவையில்லை என்று அறிவித்துள்ளதுடன், புதிய வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கான நிதியையும் வேண்டாமென நிராகரித்துள்ளனர்.

தற்போது தன்னிடமுள்ள வாகனம் சிறந்த நிலையில் இருப்பதாகக் கூறியுள்ள பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அதனால் தனக்குப் புதிய வாகனம் தேவையில்லை எனவும கூறியுள்ள அதேவேளை, தனக்காக ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தையும் நிராகரித்துள்ளார்.

இதேவேளை, பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெருமவும், தனக்கு புதிய வாகனம் தேவையில்லை என்றும் தனக்கான வாகனத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை, கலைஞர்களின் அபிவிருத்திக்குப் பயன்படுத்துமாறு, அரசாங்கத்துக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அத்துடன், பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வா, அமைச்சின் செயலாளர்கள் பயன்படுத்திய இரு வாகனங்கள் தன்னிடம் இருப்பதால், புதிய வாகனங்கள் தேவையில்லை என்று அறிவித்துள்ளார்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் அடங்கலாக 30 பேருக்கு, புதிதாக வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு, 118 கோடியே 25 இலட்சம் ரூபாய்க்கு மேல் கேட்டு, குறைநிரப்பு பிரேரணையொன்று, கடந்த செவ்வாயன்று, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post