Breaking
Sat. Nov 2nd, 2024

கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புதுக்கடை, அப்துல் ஹமீத் வீதியில்  உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று அதிகாலை 4.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  குறித்த பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான  மொஹம்மட் ரவூப் மொஹம்மட் ருஷ்கி என்ற இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை தேடி விசாரணைகள் தொடர்வதாகவும் வாழைத்தோட்டம் பொலிஸார் விடிவெள்ளிக்கு குறிப்பிட்டனர்.

நேற்று அதிகாலை 4.20 மணியளவில் வாழைத்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜயனெத்திக்கு தொலைபேசி அழைப்பொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் புதுக்கடை பள்ளிவாசலில் ஏதோ பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சூரியபண்டார தலைமையில் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றுள்ளது.

இதன் போது புதுக்கடை பள்ளிவாசல் அருகே மக்கள் கூடியிருந்துள்ளதுடன் தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

பள்ளிவாசல் முன் உள்ள வீதியிலும்  பள்ளிவாசலுக்குள்ளும் இரத்தக்கறைகள் காணப்படவே அப்பிரதேசத்தை குற்றம் நடைபெற்ற பிரதேசமாக பிரகடனம் செய்த பொலிஸார் மத்திய கொழும்பு பொலிஸ் தயவியல் நிபுணர்களை அழைத்து தடயங்களை சேகரிக்கலாயினர்.

அத்துடன்  ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அப்துல் ஹமீட் வீதியை சேர்ந்த மொஹம்மட் ருஷ்கி என்பவரே வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளமையையும், அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளதையும் உறுதி செய்ததுடன் தாக்குதலுக்கு குழுவொன்று வருகை தந்துள்ளமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிவாசலுக்கு வெளியே வீதியில் நின்றிருந்த மொஹம்மட் ருஷ்கியை கூரிய ஆயுதங்களைக் கொண்ட குழுவொன்று தாக்கியுள்ளமையும்  தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ள ருஷ்கி பள்ளிவாசலுக்குள் ஓடியுள்ளமையும் இதன் போது துரத்திச் சென்ற தாக்குதல் தாரிகள் பள்ளிவாசல் வளாகத்தினுள் வைத்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன் தாக்குதலில் படுகாயமடைந்த ருஷ்கியை பிரதேசவாசிகளே வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந் நிலையில் அதிகாலை 5.05 மணிக்கு  வாழைத்தோட்டம் பொலிஸாருக்கு அழைப்பினை ஏற்படுத்தியுள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி ருஷ்கி இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

இந் நிலையில் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பித்துள்ள வாழைத்தோட்டம் பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை தொடர்கின்றனர்.

நேற்று மாலையாகும் போது முன்னெடுக்கப்ப்ட்டிருந்த விசாரணைகளில் கொலை செய்யப்பட்டுள்ள ருஷ்கி, கடந்த 2013.10.29 அன்று இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குழுவில் அங்கத்தவராக இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இரு குழுக்களிடையே ஏற்பட்டிருந்த குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் வழக்கொன்று நிலுவையில் உள்ள நிலையில் அப்போது (2013) கொலை செய்யப்ப்ட்டிருந்த நபரினை சார்ந்த குழுவினரால் பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந் நிலையில் சந்தேக நபர்களை கண்டுபிடிக்க குற்றம் இடம்பெற்ற பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள சீ.சீ.ரீ.வீ.கமராக்களை பொலிஸார் சோதனை செய்து வருகின்றனர்.

கொழும்புக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட, கொழும்பு மத்திய பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பாலித்த சிறிவர்தன ஆகியோரின் மேற்பார்வையில் வாழைத்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயனெத்தி, குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சூரியபண்டார ஆகியோரின் கீழ் விஷேட குழுவொன்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Post