‘ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவியக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 17 வயது சிறுவன், கல்வியில் திறமைசாலியாவார். அவருக்கு, புலமைபரிசில் பெற்றுக்கொடுக்க எமது அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுக்க எதிர்ப்பார்க்கின்றோம்’ என தொலைதொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
‘குற்றவியல் சட்டத்துக்கு அமைவாக இணைய குற்றங்களுக்கு (சைபர் கிரைம்) தண்டனை வழங்க புதியச் சட்டத்தை கொண்டு வரவுள்ளோம்’ என்றும் அமைச்சர் கூறியுள்ளார். சிறிகொத்தவில் நேற்று வியாழக்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ, ‘ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் பாதுகாப்பு குறைந்திருந்தமையை ஏற்றுக்கொள்கின்றோம்’ என்றும் கூறினார்.
‘மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இவ்வாறு இடம்பெற்றிருப்பின் வெள்ளை வான் வந்திருக்கும்’ எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஆனால் நாம் அந்த மாணவனுக்கு புலமைப் பரிசில் வழங்குவது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம்’ என்றார்.