Breaking
Fri. Nov 15th, 2024

தினமும் புதிய புதிய பிரச்சினைகளையும் பொய்யான குற்றச்சாட்டுக்களையும் பேரினவாதம் எங்கள் மீது சுமத்தி வருவதுடன், பழிவாங்கும் படலத்தையும் தீவிரப்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இவ்வாறான அடக்குதல்கள் மூலம் நாம் பணியமாட்டோம் என தெரிந்திருந்தும், புதிய புரளிகளைக் கிளப்பி, மக்களை திசைதிருப்ப முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து, நாவிதன்வெளி மத்திய குழுத்தலைவர் மஹ்ரூப் தலைமையில், இன்று நண்பகல் (23) அம்பாரை, நாவிதன்வெளியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“ஜனாதிபதி தேர்தலில் நாம் ஆதரித்த வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியுற்றதன் பின்னர், இந்த சதி நாடகத்தை அவர்கள் தொடங்கி, படிப்படியாக அதிகரித்து, தேர்தல் நெருங்க நெருங்க தீவிரப்படுத்தி வருகின்றனர். திரும்பும் பக்கம் எல்லாம் அம்புகள் நிறைந்தும், சதிவலைகள் பின்னப்பட்டும் கிடக்கின்றன. எனினும், அவற்றுக்குப் பயந்து, எமது பயணத்தை நாம் ஒருபோதும் நிறுத்தமாட்டோம் என அவர்களுக்கு நன்கு தெரியும். எனவேதான் இப்போது நவீன வடிவிலான, பாரதூரமான குற்றச்சாட்டுக்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, எம்மை துரத்தி துரத்தி அடிக்கின்றனர், நாம் எழுந்துகொள்ளமாட்டோம் என நினைக்கின்றனர். இவர்களின் இந்த குரோத, பழிவாங்கும் செயற்பாடுகளை முறியடிப்பதற்கும், சதிகாரர்களால் பின்னப்பட்டுள்ள சதிவலையை சுக்குநூறாக அறுத்தெறிவதற்கும், இந்தத் தேர்தலில் நீங்கள் தருகின்ற மக்கள் ஆணையே எமக்கு முதற்பலமாக அமையும்.

மக்கள் காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையும் கடந்தகாலங்களில் மனச்சாட்சியுடன் பணியாற்றியிருக்கின்றது. பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும், உயர்மட்டக் கூட்டங்களிலும் கிடைத்த சந்தர்ப்பத்தை முடிந்தளவில் இறைவனுக்கு மாற்றமில்லாமல் நாம் பயன்படுத்தியிருக்கின்றோம். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமலேயே, நமது கட்சியை அழிப்பதற்கும், தலைமையை வீழ்த்துவதற்கும் பயங்கரச்சதிகள் மறைமுகமாகவும், நேரடியாகவும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

கடந்த தேர்தலில் நாம் மக்கள் காங்கிரஸின் மூலம் அம்பாரையில் களமிறங்கிய போதும், பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கைநழுவிப்போனது. எனினும், இம்முறை இந்த மாவட்டத்திலுள்ள பல கிராமங்களுக்கு நாம் செல்கின்ற போது, மயில் சின்னத்துக்கான மக்கள் ஆதரவு பெருகியிருப்பதைக் காண்கின்றோம்.

பல தசாப்தங்களாக நீங்கள் பல்வேறு கட்சிகள் சார்ந்த பிரதிநிதிகளை அனுப்பி வருகின்றீர்கள். எனினும், மாவட்டத்தில் உள்ள அநேகப் பிரச்சினைகள் தீர்ந்ததாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடலும் இல்லை. இதனால் நாளுக்குநாள் பிரச்சினைகள் பெருகிய வண்ணமே இருகின்றன.

மக்களின் வறுமை ஒழிப்புக்கான திட்டங்களோ, பொருளாதார மேம்பாட்டுக்கான முயற்சிகளோ இதுவரை சரிவர அமுல்படுத்தப்படவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, கடந்தகால தவறுகளை இம்முறை விடமாட்டீர்கள் என்ற பெரிய நம்பிக்கை எமக்கு இருக்கின்றது”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப், செயலாளர் சுபைர்தீன், பொருளாளர் ஹுசைன் பைலா, முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட், பள்ளித்தலைவர் அப்துல் ரஸ்ஸாக், கட்சியின் முக்கியஸ்தர் சித்தீக் நதீர், வேட்பாளர்களான ஹனீபா மதனி, ஜவாத், தாஹிர், மாஹிர், சட்டத்தரணி முஷர்ரப், வை.கே. ரஹ்மான், மாநகரசபை உறுப்பினர் முபீத், மாவட்டக் குழுத் தலைவர் சட்டத்தரணி அன்சில் மற்றும் மாவட்டக் குழு செயலாளர் ஜுனைதீன் மான்குட்டி உட்பட பிரதேச முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

Related Post