கடந்த வருடத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இப் புதுவருட காலத்தில் ஏற்பட்டுள்ள வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய வைத்தியசாலையில் தேசிய ஒருங்கிணைப்பாளர் (பயிற்சி) புஸ்பா ரம்ஜானி டி சொய்சா நேற்று(17) தெரிவித்தார்.
கடந்த 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கடந்த வருடத்துத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 8% சதவீத வீழ்ச்சியைக் காட்டிலும், ஏற்பட்டுள்ள வீதி விபத்துக்களின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 17 சதவீத அதிகரிப்பை காட்டி நிற்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், 938 பேர் வைத்தியசாலைக்கு மருத்து பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டதுடன், அவர்களில் 430 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 139 பேர் மற்றைய பிரதேச வைத்தியசாலைகளிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துப் பிரிவின் தகவல் படி 226 வீதி விபத்துக்களும், 159 உள்நாட்டு விபத்துக்களும், 212 விழுகையால் ஏற்பட்ட விபத்துக்களும், வேலைத்தளங்களில் ஏற்பட்ட விபத்துக்கள் 41 ம், வன்முறையோடு தொடர்புபட்ட விபத்துக்களாக 98 ம், விளையாட்டு விபத்துக்களாக 31 ம் புதுவருட வெடிப்பு சம்பவங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 05 உம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த காலங்களுடன் ஒப்பிடும் பொழுது வீதி விபத்துக்களை தவிர இம்முறை, புதுவருட காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்கள் குறைவடைந்துள்ளன. அவ்வகையில் வெடிப்புச் சம்பவ விபத்துக்கள் 44 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளன. அதே நேரத்தில் வன்முறையினால் ஏற்படும் விபத்துக்கள் 06 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது. அவ்வகையில் இவ் தமிழ் சிங்கள புத்தாண்டு கால பகுதியில் பாதுகாப்பு கருதி பொலிஸாரினால் அறிமுகப்படுத்தப்பட்ட குடிபோதையில் வாகனமோட்டும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையின் மூலமும் பல விபத்துக்கள் குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இத்திட்டமானது கடந்த 09 ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் குடி போதையில் வாகனம் செலுத்திய 569 மோட்டார் வாகன சாரதிகள், 333 முச்சக்கர வண்டி சாரதிகள், 52 கார் சாரதிகள், 30 லொறி சாரதிகள், மற்றும் 30 வான்சாரதிகள் உட்பட 1000 க்கும் மேற்பட்ட சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.