அமைச்சின் ஊடகப்பிரிவு
புத்தளம் மாவட்டத்தில் பலவந்தமாக வெளியாரினால் திணிக்கப்பட்டிருக்கும் சூழலியல் ரீதியான செயற்கைப் பாதிப்புகளுக்கு புத்தளத்தின் அதிகாரமிக்க அரசியல் தலைமையின் நீண்ட இடைவெளியே பிரதான காரணமென்று என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மக்கள் காங்கிரசின் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை கற்பிட்டியில் அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது,
கடந்த கால சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளினாலேயே புத்தளம் மாவட்ட பாராளுமன்றக் கனவு சிதைந்து சின்னாபின்னமாகியது. தேர்தல் காலங்களில் மட்டும் தங்களது தேவைகளுக்காக வருபவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் எந்தப்பயனும் கிடைக்கப்போவதில்லை. இந்தத்தவறுகள் மேம்மேலும் தொடருமேயானால் சமூகத்தின் இருப்புக்கு ஆபத்தே ஏற்படும். தொடர்ந்தேர்ச்சியான இந்தப் பிழைகளை இன்னும் நாம் தொடர்வதற்கு அனுமதிக்கவும் கூடாது அதற்கு ஒத்துழைப்பு வழங்கவும் கூடாது.
புத்தளத்தின் தலைமை புத்தளத்தில் பிறந்த ஒரு நேர்மையானவரிடமும் உளத்தூய்மையாக செயற்படுபவரிடமும் இறையச்சமுள்ள ஒருவரிடமும் ஒப்படைக்கப்பட வேண்டுமென்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். அவ்வாறான ஒரு தூய பணிக்கு எமது கட்சியின் வளத்தையும் தலைமையின் பலத்தையும் அர்ப்பணித்து செயற்படுவோம்.
நல்ல அரசியல் தலைவர்களை மட்டும் அடையாளங்கண்டு உருவாக்குவதுடன் நின்றுவிடாது அவர்களினூடாக மக்களின் காலடிக்கு அபிவருத்தியும் சேவையும் சென்றடையக்கூடிய ஒரு நிலையை உருவாக்க வேண்டும்.
புத்தளத்து நேரடி அரசியலில் நான் ஒரு போதும் ஈடுபடப்போவதில்லை எந்தவொரு தேர்தலிலும் புத்தளத்தை மையமாக்கொண்டு நான் இறங்கப்போவதில்லை. என்பதை மிகவம் தெளிவாகவம் அழுத்தமாகவும் பகிரங்கமாக பல தடவை கூறி இருக்கின்றேன். எனினும் எங்கள் பணிகளை வேற்றுக்கண்னோட்டத்திலும் தப்பான எண்ணத்திலும் நோக்குபவர்களே தேர்தலில் இந்த மாவட்டத்தில் நான் குதிக்கப்போவதாக புரளிகளை கிளப்பி வருகின்றனர். கடந்த காலங்களில் புத்தளம் மாட்டம் இழந்தவைகளை ஈடுசெய்ய நாம் முழு மூச்சுடன் உழைப்போம்.
கற்பிட்டி பிரதேசத்தை முறையாகத்திட்டமிட்டு அபிவிருத்தி செய்ய எண்ணியுள்ளோம். வடக்கு முஸ்லிம்களின் வாழ்விலே கற்பிட்டி என்றுமே மறக்க முடியாத மறைக்க முடியாத ஒன்றாக தடம்பதித்துவிட்டது. கற்பிபட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் கேட்போர் கூடத்துடனான 3மாடிக்கட்டிடமொன்றுக்கு விரைவில் அடிக்கல் நாட்டுவோம். காபட் பாதைகளுக்கான அடிக்கற்களை இன்று நாட்டினோம். மீனவர்களின் நலன்களுக்கான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்தவுள்ளோம். யுவதிகளின் சுயதொழில் வாய்ப்புக்கென தையல் பயிற்சி நிலையமொன்றையும் திறந்து வைத்துள்ளோம். இத்தனைக்கும் மேலாக அந்தப் பிரதேசத்தின் சுற்றுலாத்தறையை மேம்படுத்தி இங்கு வாழும் மக்கள் அதன் மூலம் பயன்பெற திட்டங்களை மேற்கொள்வோம் என்றும் அமைச்சர் கூறினார்.