புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் வடமாகாணத்தைச் சேர்ந்த 18,000 அகதிக் குடும்பங்களுக்கு, நிவாரணங்களையும் அரசின் உதவிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியின் விஷேட செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவிடம், மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால், ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருப்பதனால், இந்தக் குடும்பங்கள் வாழ்வாதார வசதிகளின்றி இருக்கின்றனர். இதுவரை இவர்களுக்கான எந்தவொரு நிவாரணமோ உதவிகளோ கிடைக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மக்களுக்கு மன்னாரிலும் வாழ்வாதாரங்கள் கிடைக்கப் பெறவில்லை. புத்தளத்திலும் வழங்கப்படவில்லை. இரண்டும்கெட்டான் நிலையில் வாழும் இவர்கள், தமது அடிப்படையான அத்தியாவசிய தேவைகளைப் பெற்றுக்கொள்வதில் மிகவும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
எனவே, இவர்களின் விடயத்தில் விஷேட கவனம் செலுத்தி, வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பசில் ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.