புத்தளத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு அபாயம் குறித்தும், அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பிலும் (13) புத்தளம் பெரிய பள்ளியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.
புத்தளம் தள வைத்தியசாலை வெளிக்கள நோயாளிகள் பிரிவுக்கான வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு விசேட உடற்கூற்று வைத்திய நிபுணர் ஒருவரின் தேவைப்பாடு ஆகியன குறித்தும் இக்கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
புத்தளம் தள வைத்தியசலையை மறுசீரமைப்பு செய்வதற்கான திட்ட வரைபை தயாரித்து, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடாக சுமார் 1000 மில்லியன் பெறுமதியான சுகாதார அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
வைத்தியவசதிகளை புத்தள மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கும் குவைத் வைத்தியசாலையை மேம்படுத்த தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் ரிஷாட் வாக்குறுதியளித்தார்.
புத்தளம் மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு முதற்கட்டமாக அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் இனைந்து ரூபா 10 மில்லியன் பெறுதியான செலவில் திட்ட வரைபொன்றை தயாரிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அத்தோடு, சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக புத்தளம் நகர சபைக்கும் பிரதேச சபைகக்கும் போதுமான டிரக்டர் உள்ளிட்ட வாகன வளங்களை பெற்றுத்தருமாறும் அத்துடன் புத்தளம் பிரதேச செயலகத்துக்கும், நகர சபைக்கும் நிரந்தர செயலாளர்களையும் புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியை நிரந்தரமாக்குமாறும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் பெரியப்பள்ளி தலைவர் ஜனாப் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள், உலமா மின்ஹாஜ் (இஸ்லாஹி), மூத்த ஆசிரியர் நதீர், கிராம சேவகர் ரஸ்மி, ஒமேகா நிறுவனர் நயீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் எஹியா ஆப்தீன், இளைஞர் அமைப்பாளர் இப்ளால் அமீன் ஆகியோருடன் ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
-ஊடகப்பிரிவு