Breaking
Mon. Dec 23rd, 2024

– பாறுக் சிகான் –

புத்தளம் பிரதேசத்தில் பாடசாலை சிறுமி மீது பாலியல் சேட்டை செய்த ஆட்டோ சாரதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று(8) மதியம் புத்தளம் நகரப்பகுதியில் நடைபெற்றுள்ளது.

வழமை போன்று பாடசாலைக்கு சிறுமியை ஏற்றி இறக்கும் ஆட்டோ சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தினால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் ஆட்டோ சாரதியை தொடர்பு கொண்ட போது அவர் பதிலளிக்க வில்லை.

பின்னர் நீண்ட நேரத்தின் பின்னர் சிறுமியை வீட்டில் விட்டு சென்றுவிட்டார்.

ஆயினும் சிறுமியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட பெற்றோர் சிறுமியை என்ன நடந்தது என கேட்டபோது சாரதியின் கொடூர முகம் வெளிச்சத்திற்கு வந்தது.

தினமும் பாடசாலைக்கு சிறுமியை ஏற்றும் இச்சாரதி தொடர்ந்தும் இவ்வாறு சிறுமியுடன் முறைகேடாக நடந்து வீட்டில் சொல்லக் கூடாது அவ்வாறு சொன்னால் கத்தியால் வெட்டுவதாக அதட்டியுள்ளார்.

இதன் காரணமாக சிறுமியும் தனக்கு தினமும் நடந்ததை பெற்றோரிடம் மறைத்து வந்தது.

எனினும் ஆட்டோ சாரதியின் வழமைக்கு மாறான செயலும் பிள்ளையின் அலங்கோலமுமே தற்போது இச்செயலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.இவ்விடயத்தை அறிந்து
இச்சம்பவத்தை மறைக்க ஆட்டோ சாரதியின் உறவினர்கள் சிறுமியின் தந்தையான மருந்தாளர் எம்.ஜன்சீர் என்பவரை பேரம் பேசியுள்ளனர்.

இதனை உறுதிப்படுத்த புலனாய்வு ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் சிறுமியின் தந்தையினை தொடர்பு கொண்டு அதனை(பேரம் பேசப்பட்ட விடயத்தை) உறுதிப்படுத்தி உள்ளார்.

தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி புத்தளம் தள வைத்தியசாலையின் 9 ஆவது விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை இன்னும் கிடைக்க பெறாமையினால் சிறுமி தொடர்ந்தும் அதே விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இச்சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத சில நபர்கள் முறைப்பாட்டை மீள பெற்றுக்கொள்ளுமாறு கேட்பதாக சிறுமியின் தந்தை எம்.ஜன்சீர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இச்செயலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த ஒட்டோ சாரதியான 3 பிள்ளைகளின் தந்தை அஸ்மீர்(வயது-42) தற்போது பொலிஸாரின் தடுப்பு காவலில் உள்ளதுடன் புத்தளம் பிரதேசம் கொப்பறா பள்ளி வீதி 3 ஆம் குறுக்கை சேர்ந்த ஜன்சீர் பௌசூலா தம்பதியின் புதல்வி பாத்திமா சீபா (வயது 6) என்பவரே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவராவார்.

By

Related Post