புத்தளம் பெரிய பள்ளிவாசலின் முன்னாள் தலைவரும் முன்னாள் கிராம அதிகாரியும் சிறந்த சமூக சேவையாளருமான அல்ஹாஜ் பீ.எம்.ஜனாப் அவர்களின் மறைவு தொடர்பில், தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அன்னாருக்கு இறைவன் ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன வாழ்வை நல்கப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மர்ஹூம் பீ.எம்.ஜனாப் அவர்களின் மறைவு குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“புத்தள வரலாற்றில், 1990ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியானது மிகவும் முக்கியமானது. வடபுல மக்கள் இடம்பெயர்ந்து புத்தளத்திற்கு வந்தபோது, அவர்களின் நலன் தொடர்பில், புத்தளம் சமூகம் எடுத்துக்கொண்ட அக்கறையின் பின்னணியில் மர்ஹூம் ஜனாப் அவர்களின் பங்களிப்பு மறக்க முடியாததொன்று. குறிப்பாக, கிராம அதிகாரியாக மட்டுமல்லாமல், பள்ளிவாசல் நிர்வாகியாகவும் இருந்து பல அளப்பறிய சேவைகளை ஆற்றியுள்ளார்.
அதேபோன்று, அரச சார்பற்ற நிறுவனங்களில் அவருக்கிருந்த தொடர்பின் மூலம், இலவச கண் சிகிச்சை முகாம்களை ஏற்பாடு செய்து, அதனூடாக சமூகத்தின் தேவைகளை நிறைவு செய்து கொடுப்பதில், மர்ஹூம் பீ.எம்.ஜனாப் அவர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பு, அவரது மறுமை வாழ்வின் விமோசனத்திற்கு நிரந்தர நன்மைகளை பெற்றுக்கொடுக்கும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் பீ.எம்.ஜனாப் அவர்களின் நற்பணிகளை பொருந்திக்கொள்ள வேண்டும் என்று பிரார்த்திப்பதுடன், அன்னாரது இழப்பால் துயுறுற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த கவலையினை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.