அறுவைக்காட்டு குப்பைக்கெதிரான புத்தளம் மக்களின் நியாயமான போராட்டத்தை மழுங்கடித்து, திசை திருப்புவதற்காக மெளனித்து கிடந்த வில்பத்து புரளியை மீண்டும் கிளறிவிட்டு இரண்டையும் ஒன்றுடன் ஒன்று முடிச்சுப் போட்டு போராட்டத்தை திசை திருப்பும் வகை சூத்திரதாரிகள் சிலர் செயற்பட்டு வருவதாக கைத்தொழில், வர்த்தகம்,நீண்ட காலம் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றஞ்சாட்டினார்.
கலைவாதி கலீலின் பவள விழாவும் “என் வில்பத்து டயரி” நூல் வெளியீடும் கொழும்பு அல்-ஹிக்மா கல்லூரியில் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவர் கூறியதாவது,
தற்போது புத்தளத்தில் சூடுபிடித்திருக்கும் முக்கிய பிரச்சினை அறுவைக்காட்டு குப்பைப் பிரச்சினையாகும். புத்தளம் வீதிகளில் ஜனநாயாகரீதியில் குரலெழுப்பிப் போராடிய அந்த மக்களின் கோரிக்கைகளுக்கு எவருமே செவிசாய்க்க தவறியதால் கொழும்பு வந்து. “இதனை நிறுத்துங்கள் நியாயம் கிடைக்க வழி செய்து தாருங்கள்” என்று சில நாட்களுக்கு முன்னர் காலி முகத்திடலில் பேரணி நடத்தி நாட்டுத்தலைவர்களிடம் மகஜர்களையும் கையளித்தனர்.
அதே போன்று நாங்கள் அரசுக்குள்ளே இருந்தாலும், அதற்கு எதிராக மிகவும் காட்டமாகவும், தொடர்ச்சியாகவும் அழுத்தங்களை கொடுத்து வருகின்றோம். அமைச்சரவை என்பது கூட்டு பொறுப்புள்ளது, அங்கு இடம்பெறும் விடயங்களை வெளியில் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. எனினும் இந்த திட்டத்தை நிறுத்துமாறு மிகவும் இறுக்கமாக குரல்கொடுத்து, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொறுப்பான அமைச்சருக்கும் உறைக்கும் வகையில் அவர்களுக்கு நாங்கள் உணர்த்தி வருகின்றோம்.
இந் நாட்டில் அன்மையில் ஜனநாயகத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்ட போது, நாங்கள் நேர்மையுடன் அரசுக்கு பக்கபலமாக இருந்து நியாயம் பெற்றுக்கொடுக்க முழுப்பங்களிப்பையும் செய்துள்ளோம். அதே போன்று புத்தளம் மக்களின் நியாயமான இந்த போராட்டத்திற்கு நீதி வழங்குமாறு அரசிலிருந்து கொண்டும் கோரிக்கை விடுக்கின்றோம். ஆகக் குறைந்தது அவர்களின் பிரதிநிதிகளை கொழும்புக்கு அழைத்து ஏற்பட்டுள்ள பிரச்சினையை கேட்டு இதற்கு என்ன தீர்வை பெற்றுக்கொடுக்கலாம் என்பது பற்றி இன்னும் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் பொறுப்பான அமைச்சர் சிந்திக்கவே இல்லையென நாம் இடித்துரைத்தோம். இவ்வாறு உணர்த்தியபோது, நாட்டுத்தலைவர்கள் அதற்கு தலையசைத்து புத்தளத்து மக்களுடன் பேசுவதென்ற முடிவுயைத் தந்தனர்.
பாராளுமன்றத்தில் எமது கட்சியின் தவிசாளர், இராஜாங்க அமைச்சர் அமீர் அலி புத்தளம் குப்பைப் பிரச்சினை தொடர்பில் மிகவும் காரசாரமாக உரையாற்றியதையடுத்து, இப்போது, ஜனாநாயக காவலர்கள் என தம்மை இனங்காட்டி வரும் சில அரசியல் வாதிகள் வில்பத்து என்ற பூகம்பத்தை மீண்டும் கிளப்பி என்னை மீண்டும் குறி வைத்து தாக்க தொடங்கியுள்ளனர். தினமும் சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.
இவ்வளவு நாளும் புத்தளம் மக்களின் பிரச்சினையை கண்டும் கேட்டும் காணாதது போன்று செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்த அரசியல்வாதி ஒருவர் இப்போது தூங்கிக்கிடந்த இனவாதக் கூட்டத்தை உசுப்பேற்றி தட்டியெழுப்பியுள்ளார். அறுவைக்காட்டையும், வில்பத்துவையும் இவர்கள் ஏன் முடிச்சிபோடுகின்றார்கள் என்று உங்களுக்கு விளங்கும், இதன் மூலம் நாங்கள் ஒதுங்கிவிடுவோம், மெளனமாகி விடுவோம் என்று இவர்கள் கனவு காண்கின்றனர்.
எமது கட்சியை பொறுத்தவரையில் இந்த நியாயமான போராட்டத்தில் மிகவும் தீவிரமாகவும், விடாப்புடியாகவும் இருக்கின்றது. இதனை வென்று கொடுப்பதில் உளத்தூய்மையுடனும், உண்மையான உணர்வுடன் செயற்பட்டு வருகின்றோம்.
கலைவாதி கலீல் எழுதிய “வில்பத்து டயரி” என்ற நூல் வில்பத்துவின் உண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது. மாணவனாக இருந்த போது கலைவாதி கலீல் பற்றி நான் அறிவேன். அவருடைய கவிதைகளை ஆர்வமாக படித்துள்ளேன், இரசித்தும் இருக்கின்றேன். அவர் பன்முக ஆளுமையுள்ளவர். இவ்வாறான ஒரு நூலை வெளியிட்ட நூலாசிரியருக்கும் அதற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த விழாவில், மெளவி காத்தான்குடி பெளஸ், தினகரன் ஆலோசகர் எம்.ஏ.எம். நிலாம், எம்.எஸ்.எம். ஜின்னா, சமீல் ஜெமீல், டாக்டர் அசாத் எம் ஹனீபா, கலாநிதி ஹஜர்ஜான் மன்சூர், சட்டத்தரணி ரஷீட் எம். இம்தியாஸ், ஆகியோர் உரையாற்றியதோடு, யாழ் அஸீம், நஜுமுல் ஹூசைன் ஆகியோரின் கவிதை வாசித்தனர். நூலின் நயவுரையை கவிஞர் முல்லை முஸ்ரிபா நிகழ்த்தினார். நூலின் முதற்பிரதியை முஸ்லிம் ஹாஜியாரின் புதல்வர் முசான் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சிகளை கியாஸ் புகாரி தொகுத்து வழங்கினார், கலைவாதி கலீலுக்கு பொன்னாடைகளும் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
-சுஐப் எம். காசிம்-