புத்தளம் – மன்னார் பிரதான வீதியின் எளுவங்குளம் பகுதியில் கலாஓயா பெருக்கெடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, எளுவங்குளம் பகுதியில் பாலத்திற்கு மேல் நீர் பெருக்கெடுத்து செல்வதினால் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், எளுவங்குளம் பாலம் எவ்வித பாதுகாப்பும் இன்றி காணப்படுகின்றமை, பல்வேறு அச்சுறுத்தல்களை தோற்றுவித்துள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே புத்தளம் – மன்னார் பிரதான வீதியில் மூன்று பாலங்களை அமைத்து கொடுக்கும் பட்சத்தில், தமது பயணத்தை மிக இலகுவாக மேற்கொள்ள முடியும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை, நாட்டில் கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பல நீர் நிலைகளின் நீர்மட்டங்கள் அதிகரித்துள்ளன.
அத்துடன், பல நீர்தேக்கங்களின் நீர் மட்டங்களும் உயர்வடைந்துள்ளன.
இதன்படி, ரன்தம்பே நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதன் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மஹாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மஹாவலி கங்கைக்கு கீழான பகுதியில் உள்ளவர்கள், அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
இதனிடையே. தலவாக்கலை மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கப்பட்டுள்ளது.
பெய்துவரும் கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.