ஐ.நா.தீர்மானத்துக்கு அமைய பொறுப்பு கூறல் மற்றும் உண்மையை கண்டறியும் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவது குறித்து கருத்துக்களை கேட்டறிந்து கொள்வதற்கான புத்திஜீவிகள் குழுக்களை அமைப்பதற்கு சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை தொடர்பிலான தீர்மானம் நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டே நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார். நாட்டின் கௌரவம் பாதுகாக்கப்படும் வகையில் ஐ.நா. பரிந்துரைகள் தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரிலும் இலங்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் உள்நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து சர்வக்கட்சிகளின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் வகையிலான செயற்த்திட்டமொன்று ஜனாதிபதியால் ஏற்படுத்தப்பட்டது. அதற்கிணங்க நேற்றைய தினம் சர்வகட்சி தலைவர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் இரண்டாவது கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ அமைப்பின் சார்பில் எந்தவொரு பிரதிநிதிகளும் பங்குபற்றியிருக்கவில்லை.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் உட்பட தமிழ், முஸ்லிம் சார்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர்.
அனைத்து கட்சிகளினாலும் ஏற்றுக்கொள்ள கூடிய விடயதானங்களை உடனடியாக அமைச்சரவையில் சமர்ப்பித்து நிறைவேற்றி கொள்ளவேண்டும். அதேபோன்று, தீர்மானங்கள் எடுப்பதற்கு முடியாதுள்ள பிரச்சினைகளை இனிவரும் கூட்டத்தொடரின் போது அலசி ஆராய வேண்டுமென சுட்டிக்காட்டினார்.
அதனை தொடர்ந்து பொதுஜன மக்கள் முன்னணியின தலைவரும் முன்னாள் அமைச்சருமான தினேஷ் குணவர்தன, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அறிக்கையை நடைமுறைப்படுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தாமல் இருக்கவேண்டும். அத்துடன் கலப்பு நீதிமன்றம் என்பது இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது அதேபோன்று ஜெனீவா அறிக்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத பல்வேறு பரிந்துரைகள் காணப்படுகின்றன என்றார்.
ஜனநாயக கட்சியின் தலைவரும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்னைய அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதாக இந்த மாநாட்டின் யோசனைகள் அமைய கூடாது. பக்கசார்ப்பற்ற முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும்
அமைச்சருமான மனோ கணேசன் குறிப்பிடுகையில்,
ஜெனீவா அறிக்கை குறித்து அவதானம் செலுத்தும் ஆர்வம் இனரீதியான பிரச்சினைகளை தீர்ப்பதில் இருக்க வேண்டும். தனி நாட்டை உருவாக்குவதற்கு எவருக்கும் தேவையில்லை. இலங்கை என்பது பல்லினத்தவர்கள் வாழும் நாடு என்பதனை புரிந்து கொண்டு செயற்படவேண்டும் என்றார்.
இதனை தொடர்ந்து மலையக மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் , 1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வௌியேற்றப்பட்டமை , முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்படவேண்டுமெனவும் வலியுறுத்தினர்.
இதன்போது குறுக்கிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் வௌிவிவகாரங்களுக்கான செயலாளருமான எம்.ஏ சுமந்திரன், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட பரிந்துரைகள் அனைத்தும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
அத்தருணத்தில் கருத்து வௌியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் , இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வு தொடர்பில் நிறைவேற்றப்பட்ட ஜெனீவா தீர்மானம் மேலும் வலுப்பெற்றிருக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடாகும். இருப்பினும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லையென வலியுறுத்தினார்.
அதனை தொடர்ந்து வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர
ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் அலசி ஆராய்ந்து பார்த்த பின்னரே இது குறித்தான தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும். ஜெனீவா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய 20 விடயங்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எட்டுவதற்கு அனைத்து தரப்பினரும் யதார்த்த ரீதியான கருத்துக்களையும் முன்வைக்க வேண்டும் என்றார்.
மக்கள் விடுதலை முன்னணி சார்பாக கலந்து கொண்ட விஜித ஹேரத் எம்.பி, உள்ளக பொறிமுறையின் ஊடாக பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க முடியும் வௌிநாட்டு பிரதிநிதிகள் தொடர்பில் மக்களை உரியவாறு தௌிவுப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கலந்து கொண்ட பிரதி அமைச்சர் அமீர் அலி,மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணை கால எல்லை 1985 ஆம் ஆண்டு வரையில் நீடிக்கப்படவேண்டும் என குறிப்பிட்டார்.
புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிடுகையில்,
தமிழ் மக்களின் இதய உணர்வினை நன்கு புரிந்து கொண்டு செயற்ப்பட வேண்டும். மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் மீது தமிழ் மக்கள் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் கடந்த கூட்டத்தில் ஐ.நா தீர்மானங்கள் தொடர்பிலான அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றினதும் எழுத்து மூலமான ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு கடந்த கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கமைய சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துமூல ஆலோசனைகளை அரசியல் கட்சிகளுக்கிடையில் பகிர்ந்து கொள்வதற்குரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படுமெனவும் மீண்டும் குறித்த விடயம் தொடர்பிலான கூட்டம் கூட்டப்படுவது தொடர்பில் அறிவித்தல் விடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி அறிவித்த நிலையில்,நேற்றைய சர்வக்கட்சிகளின் கூட்டம் நிறைவடைந்தது.