சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பொலிஸார் மேலும் சிலரின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்திருப்பதாகத் தெரியவருகின்றது.
லசந்தவின் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள புலனாய்வுப் பொலிஸ் குழு நுவரெலியா மாவட்டத்திலுள்ள கிராமசேவையாளர் ஒருவர் உட்பட பத்துப் பேரின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிச்சை ஜேசுதாசன் என்பவர் மரணமடைந்ததையடுத்து நுவரெலியா மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊரின் கிராம சேவையாளரினதும் ஜேசுதாசன் நெருங்கிப் பழகியிருந்த ஏனைய ஒன்பது பேரினதும் வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளன.
ஜேசுதாசனின் தேசிய அடையாள அட்டையைக் களவாடி அதன்மூலம் ஐந்து தொலைபேசி சிம் கார்டுகளைப் பெற்றுக்கொண்டவரே இந்தக் கொலையின் பிரதான சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படுகிறார். எனவே, அந்த அடையாள அட்டையைக் களவாடியவர் யார் என்பதைக் கண்டுபிடிக்கவே இந்தப் பத்துப் பேரின் வாக்கு மூலங்களும் பெறப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிச்சை ஜேசுதாசன் என்பவரும், கந்தேகெதர பிரியவன்ச எனும் இராணுவப் புலனாய்வுப் பிரிவு சிப்பாய் ஒருவரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். பிச்சை ஜேசுதாசன் விளக்கமறியலில் இருந்த போதே உயிரிழந்தார். அதன்பின் கந்தேகெதர பிரியவன்ச சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.