Breaking
Mon. Dec 23rd, 2024

மிஹ்வார் அஹமட் மஹ்ரூப்

இன்றைய சூழலில் நமது உரிமைகளை வாக்குகள் மூலம் வென்றெடுப்பதும் ஒரு போராட்டமாகவே இருக்கின்றது. ஒரே நாட்டில் பிறந்து வாழும் நம்மிடையில் மக்கள் கணக்கெடுப்பில் மட்டுமே பிரயோகிக்கப்பட்ட “சிறுபான்மை” “பெரும்பான்மை” என்ற வார்த்தை பிரயோகம், கடந்த காலத்தில் உருப்பெற்று அரசாங்கத்தினால் வளம்பெற்று வாழும் இயக்கத்தின் கொள்கைவாதிகளினால் இனக்கலவரமும், உயிர், சொத்து என அனைத்து வகையான சேதங்களையும் பார்த்துவிட்டோம். தமது சுயநலத்திற்காக சிறுபான்மை மக்கள் மீது அபாண்டமான பொய்களை சுமத்தி தமது இருப்பை உறுதி செய்துகொள்வதற்கு பெரும்பான்மை சமூகத்தை சேர்த்துக் கொள்வதில் அரசாங்கம் எடுத்த முடிவு பாரிய பின்னடைவும் தோல்வியும் அடைந்திருப்பதில் எந்த சந்தேகமுமில்லை.

அல்லாஹ்வின் புறத்தில் இருந்து உதவியை எதிர் பார்த்து இருந்த நமக்கு வெற்றி கிடைத்தது என்பதே உண்மை, அது அளுத்கமை மற்றும் நாட்டின் இதர பிரதேசங்களில் நேரடியாக பாதிக்கப்பட்ட எமது சொந்தங்கள் உயிர்களையும் உடமைகளையும் இழக்கும் தருணத்தில் கேட்ட பிரார்த்தனைகள், மற்றும் தொடரும் துஆக்களின் அங்கீகாரமே அன்றி வேறில்லை.

தனக்கு கிடைக்ககூடிய அதிகாரத்தையும் பலத்தையும் தனது சுயநலத்திற்காக பயன் படுத்தினால் அவனுக்கு அது கேடாகவே முடியும் என்பதை இன்ஷா அல்லாஹ் நடக்கவிருக்கும் தேர்தல் ஒரு பாடமாக அல்லாஹ் ஆக்குவானாக!

நடக்கவிருக்கும் தேர்தல் நமது சமூகத்தின் மத்தியில் நேரான வழிகாட்டலையும் பாரிய ஒரு முன்னேற்றத்தையும் இந்த இலங்கை நாட்டிற்குள் ஏற்படுத்த வேண்டும் என்பது எங்களது பேராசையாக இருக்கின்றது. அதற்கான முதல் அத்தியாயத்தை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி நிரூபிப்போம்.

இந்த பொது வேட்பாளர் கொள்கை எமது நாட்டில் ஒரு புதிய விடயமாகவும் பெரும்பாலான அரசியல் கட்சிகளாலும், பிரதிநிதிகளாலும் பல்வேறுபட்ட கருத்துகளுக்கு மத்தியில் தோற்றம் பெற்ற ஒரு சிறப்பான விடயமாகும். இச் சந்தர்ப்பம் பல கட்சி நாமங்களில், கொள்கைகளில் வேறுபட்டிருக்கும் நமது சமூகத்தையும் உள்வாங்கியிருப்பது ஒரு சிறப்பான தோற்றமாகும். இன்று முஸ்லிம் காங்கிரசும் அரசை விட்டு வெளியேறியது பலவாறு விமர்சிக்கப்பட்டாலும், தனிமை படுத்தப்பட்டு, மக்களின் சாபத்தை பெற்று அரசு தானாகவே தூக்குமேடை ஏறியுள்ளது.

இனியும் தாமதிக்காது அல்லாஹ்வின் புறத்தில் கைய்யேந்தியவர்களாக நமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்பு செய்து ஒரு விடியலை நோக்கி புறப்படுவோம்.

Related Post