இனவாதம், மதவாதம் உள்ளிட்ட நாட்டில் காணப்பட்ட பல தரப்பட்ட பிரச்சினைகளின் காரணமாக நாட்டை விட்டு புலம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் அனைவரும் மீளவும் நாட்டிற்கு வருகை தரவேண்டும். மேலும், புலம்பெயர்ந்தவர்கள் அனைவரும் இலங்கையின் புதிய மாற்றம் நோக்கிய பயணித்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார்.
ஜனவரி 8 ஆம் திகதி பின்னர் புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்றுவது உள்ளிட்ட அனைத்து நல்லாட்சி வேலைத்திட்டங்களுக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை எமக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
புலம்பெயர்ந்த இலங்கையர்கள் 2000 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,
ஜனவரி எட்டாம் ஆம் திகதி நாட்டில் ஆட்சி மாற்றம் செய்யப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி கதிரையில் அமர வைப்பதற்கு முழு நாட்டு மக்களும் ஆணை வழங்கினர். இந்நிலையில் தற்போது நாட்டில் நல்லாட்சிமிக்க அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நல்லாட்சி வேலைத்திட்டங்கள் மிகவும் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்றுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எமது புதிய அரசாங்கத்தின் அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
இதற்கமைய புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் வேலைத்திட்டத்தினை புதிய அரசாங்கம் மும்முரமாக முன்னெடுத்து வருகின்றது. இதன்பிரகாரம் தேசிய அரசாங்கத்தினால் முதற்தடவையாக இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுகின்றது. தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் எமது புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் அமையும்.
விடுதலை புலிகளுக்கு எதிராக நாட்டில் நிலைக்கொண்டிருந்த யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் பலர் இலங்கையை விட்டு புலம்பெயர்ந்தனர். நாட்டிற்கு பெரும் வரமாக கிடைக்கபெற்ற புத்திஜீவிகள் பலர் எமது நாட்டை விட்டு பிரிந்து சென்றனர். அதேபோன்று, இலங்கையில் இருந்தால் எமது பிள்ளைகளுக்கு சீரான கல்வி கிடைக்காது என்ற அச்சத்தில் பல சிங்களவர்கள் நாட்டை விட்டு சென்றனர். இனவாதம் தலைவிரித்தாடியதன் விளைவாக முஸ்லிம்களும் எம்மை விட்டு சென்றனர்.
இந்நிலையில் தற்போது இனவாதம் , மதவாதம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் மிகவும் சாதகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இனவாதம் இல்லாத புதியதொரு இலங்கை கட்டியெழுப்பபட்டுள்ளது. ஆகவே, அச்சம் காரணமாக நாட்டை விட்டு புலம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் அனைவரும் நாட்டிற்கு மீளவும் திரும்ப வேண்டும்.
புதிய அரசாங்கத்தினால் பல்வேறு நல்லாட்சி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய செயற்திட்டங்களுக்கு புலம்பெயர்ந்த இலங்கையர்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டும். இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் வேலைத்திட்டம் எமது ஆட்சியின்போதே மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
புலம்பெயர்ந்தவர்களில் இரட்டை பிரஜாவுரிமை கிடைக்க பெறாதவர்கள் அந்த நாட்டில் இருந்து கொண்டே இலங்கையின் மாற்றம் நோக்கிய பயணத்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அதேபோன்று, நல்லாட்சியை மேம்படுத்தும் எமது அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களுக்கும் புலம்பெயர்ந்தவர்கள் ஆதரவு வழங்குவது அவசியமாகும்.
இங்கிலாந்திலோ அல்லது ஏனைய நாடுகளிலோ கிரிக்கெட் போட்டி நடைபெறுவதாக இருந்தால் அங்கே விளையாடும் இலங்கை அணிக்கு எமது தாய்நாடு என்ற தேசப்பற்று சிந்தனையுடன் ஆதரவு வழங்குகின்றீர்கள். ஆகவே, இது போன்று நாட்டின் அனைத்து விதமான செயற்பாடுகளுக்கும் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.