திருகோணமலை, புல்மோட்டை, அரிசிமலைப் பகுதியில் 500 ஏக்கர் காணியை அளவீடு செய்யும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நேற்று முறுகல் நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்த நில அளவீடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
இதன்போது அபூபக்கர் (வயது 54) என்பவர் காயமடைந்து புல்மோட்டை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நில அளவை திணைக்களத்தால் பூஜாபூமி திட்டத்தின் கீழ் இந்த அளவை செய்யப்படவிருந்தது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து அரிசிமலைப் பகுதியில் ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டது. பொலிஸ் பாதுகாப்புடன் நேற்றுக்காலை 8.30 மணியளவில் அங்குவந்த நில அளவையாளர்கள் மக்களின் காணிகளுக்குள் நின்று பொலிஸ் பாதுகாப்புடன் அள வீடுகளை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு விரைந்த மூன்று கிராமங்களையும் சேர்ந்த சுமார் 600 இற்கும் மேற்பட்ட மக்கள், நில அளவீட்டை உடனடியாக நிறுத்துமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போதே பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. அதன்போது பொதுமக்களில் ஒருவர் காயமடைந்தார்.
அரிசிமலை பகுதியை அண்மித்துள்ள பொன்மலைக்குடா, வீரந்தீவு மற்றும் தேத்தாவடி தீவு ஆகிய கிராமங்களை ஊடறுக்கும் வகையிலேயே இந்த நில அளவை மேற்கொள்ளப்படவிருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள விஹாரையை அண்மித்ததாகவே இந்த மூன்று கிராமங்களும் இருக்கின்றன என்று தெரிவித்த மக்கள், இந்த கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 135 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் புல்மோட்டையில் தங்களுடைய உறவினர்கள் வீடுகளில் இன்னும் வாழ்ந்துவருவதாகச் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.யே.மார்க்ஸ் அங்கிருந்த திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபிக் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் மக்களிடம் நடத்திய பேச்சை அடுத்து நில அளவீடும் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து இந்த நில அளவீடு தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.யே.மார்க்ஸ் அறிவித்தார். அதனையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.