-எம்.வை.அமீர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இக்கட்சியை ஆரம்பித்ததன் நோக்கம், முஸ்லிம் காங்கிரசின் புதிய தலமையினால் புறம்தள்ளப்பட்டு ஒருசிலரின் அபிலாசைகளை நிவர்த்திக்கும் கட்சியாகி கீழ்மட்டத்துக்குச் சென்றுகொண்டிருப்பதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்குமாகாண சபை உறுப்பினர்களின் முன்னாள் குழுத்தலைவரும் தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், நடக்கவிருக்கும் பாராளமன்ற தேர்தலின் பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குக் கிடைக்கும் தேசியப்பட்டியல் பாராளமன்ற உறுப்புரிமையூடாக பாராளமன்றம் செல்வார் என எதிர்பார்க்கப்படுபவருமான எ.எம். ஜெமீல் தெரிவித்தார்.
2015-07-22 ம் திகதி சாய்ந்தமருதில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட பாராளமன்ற தேர்தல் வேட்பாளருமான கலாநிதி சிராஸ் மிராசாஹிபின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இம்மக்கள் சந்திப்பில் சாய்ந்தமருதில் உள்ள பெரும் எண்ணிக்கையான புத்திஜீவிகளும் துறைசார்ந்தவர்களும் ஜெமீல் மற்றும் சிராஸின் தீவிர ஆதரவாளர்களும் பங்கு கொண்டிருந்தனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய தேசிய அமைப்பாளர் ஜெமீல், மறைந்த தலைவர் அவர்கள் சமூகம் சார்ந்த பல்வேறு உத்தரவாதங்களை அந்தந்த சந்தர்ப்பங்களில் இருந்த தலைவர்களிடம் பெற்று அதனூடாக பாரியlயளவில் பங்காற்றியதாகவும் தற்போதைய தலைமை உருப்படியான எதனையும் செய்யவில்லை என்றும், பெட்டிகள் மீது கொள்ளும் ஐக்கியத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தலைமை சமூக நலனில் கொள்வதில்லை என்றும் தெரிவித்தார்.
மறைந்த தலைவர், அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி தனது வேலைத்திட்டங்களையும் உயர் நியமனங்களையும் வழங்கியதாகவும் தற்போதைய தலைமை கண்டியை மையப்படுத்தியும் தனது குடும்பத்தை மையப்படுத்தியுமே தனது நகர்வுகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட தன்னை தலைமை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றும் தெரிவித்த அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமை சமூக நலனையே பிரதானமாக கொண்டு செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் இறுக்கமான ஒப்பந்தம் செய்துள்ளதன் காரணமாக இம்முறை இடம்பெறும் பாராளமன்ற தேர்தலில் கூட வேட்பாளர் ஒதுக்கீட்டு விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது இலக்கை அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை விடயமாக கருத்துத் தெரிவித்தபோது சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையை, பெரும்பான்மையாக வாக்களித்த இம்மக்களுக்கு கட்சி செய்து கொடுக்க காத்திரமான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை என்றும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமை சாய்ந்தமருதுக்கு பாராளமன்ற உறுப்புரிமையை வழங்கி இவ்வூரின் தேவைகளை அந்த பாராளமன்ற உறுப்பினர் ஊடாகவே செய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்திஜீவிகளை தன்னுடன் இணைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறிய ஜெமீல், அமைச்சர் றிசாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதிகமான புத்திஜீவிகளை தன்னகத்தே இணைத்து வருவதாகவும் அதன் ஒரு அங்கமாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் அவர்களையும் இணைக்க முயற்சிப்பதாகவும் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயிலை இணைத்து அவரும் இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாகவும் தெரிவித்த மாகாணசபை உறுப்பினர், கல்வியாளர்களும் துறை சார்ந்தவர்களும் நாளுக்கு நாள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட பாராளமன்ற தேர்தல் வேட்பாளருமான கலாநிதி சிராஸ் மிராசாஹிப்,
அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கீழ் போட்டியிடுவதையிட்டு தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தன்னுடைய வெற்றிப்பயனத்தில் எல்லோரும் இணைந்து கொள்ளவேண்டும் என்றும், கல்முனை மாநகரசபையை மையப்படுத்தி இன பிரதேச வேறுபாடின்றி தான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும், தனது மக்கள் சேவையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மழுங்கடித்து விட்டதாகவும், மக்களுக்காக செயற்பட தனக்கு மக்கள் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முன்பு அரசியல் செய்தது போல் இணக்க அரசியல் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்த சிராஸ், மக்கள் சேவைக்காக தன்னை அர்ப்பணிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த அரசியல் வரலாற்றில் அவர்கள் விட்ட தவறுகளை மக்களுக்கு சொல்லாமல் விடப்போவதில்லை என்று தெரிவித்த அவர், மக்கள் உண்மையை உணர்ந்து செயற்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தன்னை மீண்டும் இணைந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியதாகவும் தான் ஏற்கனவே வன்னி பஸ்ஸில் ஏறிவிட்டதாக அவர்களுக்கு பதிலளித்ததாகவும் தெரிவித்தார்.