Breaking
Thu. Nov 14th, 2024

-ஊடகப்பிரிவு-

இஸ்லாமிய வரையறைக்குள் முஸ்லிம் பெண்கள் தமது செயற்பாடுகளை அமைத்துக்கொண்டு, அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைய வேண்டும். அப்போதுதான் சிறந்ததொரு சமூகத்தை உருவாக்க முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார்.

நிந்தவூரில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

மூட நம்பிக்கையிலும், பெண்களால் முடியாது என்ற அறியாமையிலும் இருந்த பெண்கள், இன்று கல்வித்துறையில் மாத்திரமின்றி ஏனைய அனைத்துத் துறைகளிலும் ஆண்களை விட சிறந்த நிலைக்கு முன்னேற்றம் கண்டு வருவதனை எவரும் மறுதலித்துக் கூறமுடியாது.

பெண்கள் வைத்தியர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் ஏனைய உயர் பதிவிகளையும் வகிப்பதற்கு நாம் அனைவரும் அதிக அக்கறையும், ஆர்வமும் காட்டிவரும் இந்தக் காலத்தில், ஏன் அரசியலில் ஈடுபட முடியாது? என்பதனைப் பற்றி நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள உள்ளூராட்சித் தேர்தல் திருத்த சட்டமூலத்துக்கமைய, பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதனால், அதனை எவரும் தட்டிக்கழிக்கவோ அல்லது கருத்திற்கெடுக்காமலோ இருந்து விட முடியாது. அவ்வாறு இருப்போமாயின் சமூகத்திற்கு எந்தவித பிரயோசனமற்றவர்களும், தகைமையில்லாதவர்களும் அந்த இடைவெளிக்குள் சென்றடைவதை தடுக்க முடியாது போய்விடும். எனவே, ஆளுமை நிறைந்த, சிறந்த தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட பெண்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதில் மக்கள் காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையும் மிகவும் அவதானத்துடன் கவனம் செலுத்தி வருகின்றது.

தற்காலத்தில் பெண்களின் அரசியல் பிரவேசம் கேலிக்கையாகவும், வெறும் கண்துடைப்பாகவும் நோக்கப்பட்டு வரும் நிலையில், சில அரசியல் கட்சிகள் எந்தவித தகைமைகளுமற்ற சிலரை களமிறக்கியுள்ளன. ஆனால், மக்கள் காங்கிரஸ் மகளிர் அணியொன்றை உருவாக்கி, இன்று நாடு முழுவதும் அதற்கான முக்கியத்துவத்தினை வழங்கி வருகின்றது.

இலங்கையில் பெண்கள் 52 சதவீதமாகக் காணப்படுகின்றனர். இந்நிலையில்  பெண்களின் அரசியல் பிரவேசம் எதிர்காலத்தில் நாட்டின் அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதுடன், பெண்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் செவிசாய்க்க வேண்டியதொரு நிர்ப்பந்தமும், தேவையும் ஏற்படப் போகின்றதென்பது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

கடந்த 30 வருடகால கொடிய யுத்தத்தினாலும், பயங்கரவாத செயற்பாடுகளினாலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களும்,சிறுவர்களுமே. இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் 40,000 க்கும் மேற்பட்ட விதவைகள் உள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான அங்கவீனர்கள் உள்ளனர். இவர்களின் குடும்பங்களுக்கான எந்தவொரு முறையான செயற்திட்டத்தினையும் எந்தவொரு அரசும் வகுக்காதது துரதிஷ்டமே.

இந்த ஆட்சியின் பங்காளர்களான எமது கட்சி இவ்வாறான பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவதற்கு, முறையான செயற்திட்டம் ஒன்றை வகுக்கும் என நாம் உறுதியளிக்கின்றோம்.

மேலும் குடும்ப சுமை, வறுமை, கணவன்மார்களின் அச்சுறுத்தல், போதைப்பொருள் பாவனை போன்ற காரணங்களினால், பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லுதல், சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுதல் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுதல் போன்றன இந்த நாட்டில் மலிந்து காணப்படுகின்றது. இந்தவிடயத்தில் ஒரு முறையான செயற்திட்டம் கொண்டுவரப்படாமை பாரிய குறைபாடாகவே உள்ளது.

குறிப்பாக பெண்களும், இளைஞர்களும் புதிய மாற்றங்களை கொண்டுவர முயற்சிக்க வேண்டும். மாற்றங்களின் ஊடாகவே பிரதேசமும், மக்களும், சமூகமும் விமோசனமடையும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து, உள்ளுராட்சி சபைகளின் ஆட்சி அதிகாரத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் தாருங்கள். அதன் மூலம் நாம் எதிர் நோக்கும் அனைத்து அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஊழல், மோசடிகளுடன் போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களை இதுவரை காலமும் ஏமாற்றி வரும் கூட்டத்தினரின் போலியான முகத்திரையையும். கிழித்தெறிவதற்கு உறுதுணையாக இருந்து செயற்படுங்கள் என்றார்.

 

 

 

 

 

 

Related Post