பாகிஸ்தானில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பெண்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து தேர்தல் முடிவை அந்நாட்டு தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. நாட்டின் வடமேற்கில் உள்ள, பழமைவாதிகள் அதிக அளவில் வசிக்கும் கைபர் பக்துன்க்வா மாகாணம் லோயர் திர் மாவட்டத்தில் உள்ள பிகே-95 தொகுதிக்கு கடந்த மே 7-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும், தேர்தலின்போது பெண்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்புகள், ஊடகங்கள் ஆகியவை போராட்டத்தில் ஈடுபட்டன.
இதையடுத்து, ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி வேட்பாளரின் வெற்றி ரத்து செய்யப்படுவதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தலில் பெண்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், பிகே-95 தொகுதி இடைதேர்தல் ரத்து செய்யப்படுகிறது. அந்தத் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும். இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும்” என்றார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து பெண்கள் உரிமை அமைப்பைச் சேர்ந்த ஷாத் பிபி கூறும்போது, “தேர்தலில் வாக்களிக்க பெண்களை அனுமதிக்கக் கூடாது என்பதற்காக அரசியல் கட்சிகளுக்கிடையே வாய்வழி ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்நிலையில் தேர்தலை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அடுத்த முறை பெண்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
பாகிஸ்தானில் பெண்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தேர்தல் முடிவை ரத்து செய்வது இது முதல் தடவை அல்ல. கடந்த 2013-ம் ஆண்டு இதே காரணத்துக்காக 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவை நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.பொதுவாக கைபர் பக்துன்க்வா மாகாணத்திலும் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்திலும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க முன்வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.