Breaking
Fri. Nov 15th, 2024

“பெரிய ஹஸ்ரத்” என எல்லோராலும் அன்பாகவும், உரிமையுடனும் அழைக்கப்படும் காத்தான்குடி அப்துல்லா ஹஸ்ரத்தின் மறைவு, இஸ்லாமிய உலகுக்கு குறிப்பாக, இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பேரிழப்பாகும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்

ஆன்மீகப் பணிக்காக இலங்கை வந்த பெரியார் அப்துல்லாஹ் ஹஸ்ரத் காத்தான்குடியில் ஜம்இய்யதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் ஆசிரியராகவும், அதிபராகவும் இருந்து ஆற்றிய பணிகள் காலத்தால் மறக்க முடியாதவை. இலங்கையில் முதன் முதலாக ஹாபிழ்களை உருவாக்கும் குர்ஆன் மனனப்பிரிவை ஆரம்பித்து, பன்னூற்றுக்கணக்கான இஸ்லாமிய உள்ளங்களில் புனித திருக்குர்ஆனை சுமக்கச் செய்தவர். அத்துடன் அரபுக்கல்லூரி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை வகுத்து, ஆயிரக்கணக்கான மெளலவிகளையும் ஆலீம்களையும் உருவாக்கிய இலட்சியப் புருஷர்.

இந்தியாவின் அதிராம் பட்டினத்தில் அன்னார் பிறந்த போதும், இலங்கை மண்ணைத் தனது சொந்த மண்ணாக நேசித்து நமக்கெல்லாம் அளப்பரிய சேவைகளை மேற்கொண்ட சிறந்த மார்க்கப்பெரியார். வெறுமனே ஆன்மீகத் துறையில் மட்டும் அவர் தன்னை மட்டுப்படுத்தியிருக்கவில்லை. அரசியல் ரீதியாக இலங்கை முஸ்லிம்களுக்கு ஆபத்து ஏற்பட்ட வேளைகளில் எல்லாம் நல்லெண்ணத் தூதுவராக செயற்பட்டு, உரியவர்களை சந்தித்து பிரச்சினைகளை சாமர்த்தியமாகத் தீர்த்து வைத்திருக்கிறார். முஸ்லிம் சமூகத்தின் விடிவிற்காக அரியபல ஆலோசனைகளை வழங்கிய மர்ஹூம் அப்துல்லா ஹஸ்ரத், இனங்களுக்கிடையே உறவுப் பாலமாக விளங்கியவர்.

கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஒரு கொடூரமான, பயங்கரமான காலகட்டத்தில் இருந்தபோது, தீவிரவாதிகளின் முகாம்களுக்குச் சென்று, அவர்களின்  தலைவர்களுடன் சாவதானமாகப் பேசி, சமரசத் தீர்வுகண்டு இருக்கின்றார்.

அன்னாரின் இழப்பு எமக்குப் பேரிடியாக அமைந்துவிட்டது.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

By

Related Post