– அபூஉமர் அன்வாரி BA மதனி –
துன்பங்களை மனமுவந்து ஏற்று,நித்திரை,காலம்,உதிரம் வாழ்க்கை என அனைத்து தியாகங்களையும் எனது பின்னைய சந்திக்கு என மகிழவோடு ஏற்ற ஒரு தியாகப் பிரிவினர் பெற்றோர்கள்.அத்தகைய ஒரு வகுப்பினர் ஒதுக்கப்பட்டு இன்னல்களுக்கு முகம் கொடுப்பதானது அவர்களுக்கு செய்யும் அநீதியாகும்.அவர்களின் உரிமைகள் கடமைகள் எவை என அல்குர்ஆன் அல்ஹதீஸில் விரிவாக கூறப்பட்டுள்ளன. அவற்றை ஊதாசீணப்படுத்தும் போது அதன் விளைவு கடுமையாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டுகிறது.
அல்லாஹ் தனக்குரிய கடமையை அடுத்து பெற்றோரின் மீது பிள்ளைகளுக்கு உள்ள கடமையை தெளிவாக குறிப்பிடுகின்றான் “அவனையன்றி (வேறுஎவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!” (17:23.) மேலும் “நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன்பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (31:14)
படைத்தவனுக்கு அடுத்து கட்டுப்பட்டு பணிவிடை செய்வதற்கு மிகவும் தகுதியான பிரிவினர் பெற்றோர்கள்.அவர்கள் அடையும் துன்பங்களையும் தியாகங்களையும் அல்லாஹ் மனிதனுக்கு ஞாபகமூட்டி அவர்களுக்கு சிறிய வார்த்தையால் கூட தூற்றிவிடாதீர் என பணிக்கிறான்.இது இவ்வாறு இருக்க இவர்களை துன்புறுத்துவது எவ்வளவு பெரிய கொடுமை அநியாயம்.இவர்கள் மேற்கொண்ட தியாகத்துக்கு எதையும் பிரதியீடாக எதிர்ப்பார்க்கவில்லை.அதற்கு நிகராக எவராலும் கொடுத்துவிடவும் முடியாது.
இவர்களை பராமரிப்பது பிள்ளைகளின் தலையாய கடமை.இதை புறக்கணிப்பது என்பது நன்றி மறக்கும் ஒரு கெட்ட குணம்.அவர்களை தும்புறுத்துவது என்பது பெரும் பாவங்களில் ஒன்று.இம்மையிலும் மறுமையிலும் தண்டணையை அனுவித்தே தீர வேண்டும் என்பது அல்லாஹவின் நியதி.இதுவே நியாயம்.
நபிகளார் குறிப்படும் போது (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘பெரும்பாவங்களிலேயே மிகப் பெரிய பாவங்களை உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘ஆம் (தெரிவுயுங்கள்), அல்லாஹ்வின் தூதரே’ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள்,’அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோரைப் துன்புறுத்துவதும் ஆகும்’ என்றார்கள்.( நூல்: புகாரி, எண் 6273. அறிவிப்பாளர் அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அவர்கள்.)
சடங்கு சம்பிரதாயம் அனைத்தையும் தாண்டி அவர்களது உரிமைகளை பேணுவதும் பணிவிடை செய்வதும் அல்லாஹ் விதித்த கட்டாயக்கடமை.இதை செய்யும் போது நன்மையும் விடும் போது பாவமும் கிடைக்கிறது.என்பதை மனதில் கொள்ள வேண்டும்.நபிமார்கள் பெற்றோருக்குரிய கடமைகளை சரிவர நிறைவேற்றினார்கள். எனவே அவர்களை அல்லாஹ் புகழ்ந்து குறிப்பிடுகிறான்.பெற்றோர் இறை நிராகரிப்பாளர்களாக இருந்த போதும் அவர்களை நிந்திக்காது செயற்பட்டார்கள். இப்றாஹீம் (அலை) அவர்கள் தனது தந்தையை அழகிய முறையில் அழைக்கின்றார் இதை குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. “என் அருமைத் தந்தையே! (யாதொன்றையும்) கேட்க இயலாத, பார்க்க இயலாத உங்களுக்கு எந்தத் தேவையையும் பூர்த்தி செய்ய இயலாததுமான ஒன்றை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று அவர் தம் தந்தையிடம் கூறியதை நினைவுபடுத்தும். “என் அருமைத் தந்தையே! மெய்யாகவே உங்களிடம் வந்திராத கல்வி ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது; ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் செவ்வையான நேர்வழியில் நடத்துகிறேன். “என் அருமைத் தந்தையே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்; நிச்சயமாக ஷைத்தான், அர்ரஹ்மானுக்கு (அருள் மிக்க நாயனுக்கு) மாறு செய்பவன்.(அத்தியாயம் 19,வசனங்கள் 42,43,44).மேலும் நூஹ் (அலை) அவர்கள் தமது பெற்றோருக்கு இவ்வாறு பிரார்த்திக்கும் போது “என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே” (என்றும் கூறினார்). (71:28.).பெற்றோருக்கு பணிவிடை செய்த யஹ்யா (அலை) அவர்களை சிலாகித்து அல்லாஹ் குறிப்பிடும் போது.”மேலும், தம் பெற்றோருக்கு நன்றி செய்பவராகவும் இருந்தார்; அவர் பெருமை அடிப்பவராகவோ, (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவராகவோ இருக்கவில்லை.”(19:14.)
அவர்களின் பெயர்கொண்டு மரியாதையின்றி அழைப்பது ஏளனமாக கருதுவது அவமரியாதை செய்யும் விதத்தில் நடந்து கொள்வது.அவர்களுக்கு பணிவிடை செய்வதை ஒரு பாரமாக கருதுவது.ஆகிய சிறுவிடயங்களும்.இதை தாண்டி உலவியல் உடலியல் ரீதியில் துன்புறுத்தல் போன்றன.அனைத்தும் குற்றமாகும் அதற்குரிய தண்டனையை அனுவக்க வேண்டியது நியதி என்தை மறக்க முடியாத உண்மை.