பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபின் ஏற்பாட்டில், பொத்துவில் பிரதேச செயலாளர், திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம நிலதாரிகள் உடனான ஒன்றுகூடலொன்று நேற்று (14) பொத்துவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
அரசின் கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் நாட்டின் பல்வேறு துறைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ள நிலையில், குறித்த திட்டத்தின் ஊடாக பொத்துவிலின் சுற்றுலாத்துறை மற்றும் தனிநபர் வாழ்வாதாரம் போன்றவற்றின் அபிவிருத்தி தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. இதன்போது, பாராளுமன்ற உறுப்பினரின் எண்ணக்கருவின் கீழ் திட்டமிடப்பட்ட பொத்துவிலின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியை நோக்காகக் கொண்ட திட்டவரைபுகள் சில சமர்ப்பிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டதுடன், பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்து மேலும் சில வேலைத்திட்டங்களை உள்வாங்குதற்கென, கலந்துகொண்ட அதிகாரிகளின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டது.
அத்துடன், பொத்துவிலில் இயங்காமலும் பயன்படாமலும் இருக்கும் தொழிற்சாலைகளும், அதன் கட்டிடங்கள் பற்றியும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் கேள்வி தொடுத்தார். அப்போது அரசுக்கு சொந்தமான சில கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு விடப்படாமல், பல வருடங்களாக தனிநபர்களினால் கையகப்படுத்தபட்டுள்ள விடயம் வெளிக்கொணரப்பட்டது. குறித்த விடயத்தை கவனத்தில் எடுத்த பிரதேச செயலாளர், அதற்கான தீர்வை விரைவில் பெற்றுக்கொள்வதற்காண நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பித்து வைத்தார்.
அத்துடன், பிரதேசம் தொடர்பான தரவுகளை துரிதமாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் தயார்படுத்துமாறு கலந்துகொண்ட அதிகாரிகளிடம், பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் வேண்டிக்கொண்டதுடன், பிரதேசத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை எடுக்க தயாராக உள்ளதாகவும் அதற்காக இன, மத அரசியல் வேறுபாடுகள் கடந்து அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொண்டார்.