வெளிநாட்டு கடன் சுமையில் நாடு மூழ்கியிருக்கும் நிலையில், இந்த சவாலான சந்தர்ப்பத்தில், வாத பேதங்களை கைவிட்டு, நாட்டை கட்டியெழுப்ப அறிவூட்டலையும் வழிக்காட்டலையும் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சட்டத்தரணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் சட்டத்தரணிகளுக்கும் இடையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், கடந்த ஒன்றரை வருடங்களில் இலங்கை இழந்திருந்த பல வெற்றிகளை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
நாடு பெற்றுள்ள முன்னேற்றம் பௌதீக ரீதியில் புலப்படாவிட்டாலும், நாட்டுக்கு சர்வதேச ரீதியில் மிகப் பெரிய புகழை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைக்கும் எவருக்கும் செவிக்கொடுக்கும் நபர் என்ற வகையில், அனைவரது உதவியுடன் நாட்டை கட்டியெழுப்பும் தேவையே தனக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை நாட்டில் நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தி ஜனாதிபதி முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சட்டத்துறையினர் என்ற வகையில், தாம் அனைவரும் முடிந்தளவு உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக சட்டத்தரணிகள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.
இந்த சந்திப்பில் சட்டத்தரணிகளுடன் அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, பைசர் முஸ்தபா, அனுரபிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி ஆகியோரும் கலந்து கொண்டனர்.