நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் ரிஷாட் மேலும் கூறியிருப்பதாவது,
“ரமழான் மாதம் முழுவதும் அல்லாஹ்வுக்காக நோன்பிருந்து, அதன் முடிவில் வருகின்ற பெருநாள், நோன்பாளிக்கு கிடைக்கும் மிகப்பெரிய சந்தோஷமாகும். இதன் மூலம் இரண்டு வகையான திருப்தியை ஒரு நோன்பாளி பெறுகின்றார். ஒன்று, மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு நோற்கக் கிடைத்த மகிழ்ச்சி. இரண்டாவது, பெருநாளில் தனது உறவுகளுடன் கொண்டாடும் மகிழ்ச்சி. இத்தகைய மகிழ்ச்சியில் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்களுக்கு, மேலும் மேலும் இறையருள் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.
அதேபோல் இன்னமும் நிம்மதியாக மீள்குடியேற முடியாத நிலையில் இருக்கும் வடபுல முஸ்லிம் அகதிகள், தங்களுக்கான முழு உரிமைகளையும் பெற்று மீள்குடியேறி, ஏனைய மக்களைப்போல் சிறப்பாக வாழ்வதற்காக இப்பெருநாளில் ஒவ்வொரு முஸ்லிமும் பிரார்த்திப்பது கடமையாகும். நமது சகோதரர்கள் சிலர் வாட, நாம் முழுமையான மகிழ்வைக் கொண்டாட முடியாது.
அது மாத்திரமின்றி அண்மைக்கால கலவரங்களினால் பாதிக்கப்பட்டு, இயல்பு வாழ்வை இழந்து தவிக்கும் கண்டி, கட்டுகஸ்தோட்டை, திகன முஸ்லிம்களுக்கும் மற்றும் காலி, ஜின்தொட்டை முஸ்லிம்களுக்கும் இறைவன் மீண்டும் நிம்மதியையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டுமென நாம் பிராத்தனை புரிவதும் நமது கடமையாகும். அத்துடன், வெள்ள அனர்த்தங்களினால் பாதிப்புற்ற மக்களுக்கு, மீண்டும் சீரான வாழ்வு அமைவதற்கும் நாம் இறைவனை இறைஞ்ச வேண்டும்.
அதேபோல், அநியாயமாக அகதிகளாக்கப்பட்ட மியன்மார் முஸ்லிம்களும், பலஸ்தீன மக்களும் அவர்களினது உரிமைகளைப் பெற்று, தமது சொந்த நாட்டில் நிம்மதியாகவும், உரிமையுடன் வாழவும் இந்நன்னாளில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.
முஸ்லிம்களாகிய நாம் சகோதரத்துவத்துடன் ஏனைய இனங்களுடன் ஒற்றுமையைப் பேணி, இன நல்லுறவை வளர்த்து வாழ விரும்புகின்றோம் என்பதை கடந்த காலங்களில் நாம் உணர்த்தி இருப்பது போன்று, தொடர்ந்தும் அதனை கடைப்பிடிப்பதன் மூலம் இனவாதிகளின் கொட்டத்தை அடக்க முடியும் என்பதே எனது உறுதியான நம்பிக்கை ஆகும்.”
-ஊடகப்பிரிவு-