முஸ்லிம் சமூக ஆய்வாளரும், நூலாசிரியருமான பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு செய்தி கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு தொடர்பாக வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் பிரதியமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
எருக்கலம்பிட்டியைப் சேர்ந்த பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் கல்வி துறையில் சிறந்த கல்விமானாக திகழ்ந்தார். இவர் 1990ம் ஆண்டு இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை நூல் வடிவில் வெளியுலகத்திற்கு வெளிக்காட்டிய ஒரு கல்வியாளர் ஆவார்.
அதுமட்டுமல்ல வில்பத்துப் பிரச்சினை தொடர்பில் முஸ்லிம்களின் இருப்பு பறிபோகும் நிலையில் இருந்த சமயத்தில் அதனை நூல் வடிவில் உண்மை நிலையை பிற சமூகத்திற்கு வெளிக்காட்டிய பெருமை இவருக்கு உள்ளது.
இவரது இழப்பானது முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமல்லாது இந்நாட்டிலுள்ள அனைத்து இன மக்களது கல்வி வளர்ச்சிக்கு இழப்பாகவே நான் கருதுகின்றேன். கல்விப் பணியில் மாத்திரம் இருந்து விடாமல் வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவும், அவர்களது இருப்புக்காகவும் அரசியல்வாதிகளோடு இருந்து கொண்டு குரல் கொடுத்த மகான் என்றால் மிகையாகாது.
எனவே அன்னாரது இழப்பால் துயறுரும் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது தூய எண்ணங்கள் நிறைவேற இச்சந்தர்ப்பத்தில் இறைவனை பிரார்த்திக்கின்றேன் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.