Breaking
Wed. Dec 25th, 2024

பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் இணையதளங்கள் தங்கள் நாட்டு சட்ட திட்டங்களுக்கு புறம்பாக நடந்து கொள்வதாக ரஷ்ய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே நிலை நீடித்தால் எந்நேரத்திலும் இந்த மூன்று இணையதளங்களும் ரஷ்யா முழுவதும் முடக்கப்படும் என்றும் ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது.

இது குறித்து ரஷ்யாவின் இணைய பாதுகாப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் ராஸ்காம்னட்சார் கூறுகையில், “மூன்று அமெரிக்க இணைய நிறுவனங்களுக்கும் எங்கள் நாட்டின் இணைய சட்ட திட்டங்களை மீறி வருவது குறித்து கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளோம். ரஷ்யாவிற்கு எதிரான கருத்துக்களை பரப்பி வரும் வலைப்பூ எழுத்தாளர்களுக்கு (bloggers) இம்மூன்று நிறுவனங்களும் ஆதரவு அளித்து வருகின்றன. அரசுக்கு எதிராக செயல்படுபவர்களைப் பற்றி தகவல் தெரிவிக்குமாறு மூன்று நிறுவனங்களிடம் பலமுறை வலியுறுத்தியும், அவற்றை ஏற்க நிறுவனங்கள் மறுத்து வருகின்றன. இனியும் இது தொடர்ந்தால், மூன்று இணையதளங்களும் எந்த நேரத்திலும் முடக்கப்படலாம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் இந்த மிரட்டலுக்கு பதிலளித்துள்ள பேஸ்புக், ரஷ்ய அரசு கேட்டுள்ள பயனர்களின் தகவல்களை சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. டுவிட்டர் நிறுவனமும், ரஷ்ய அரசின் கோரிக்கையை ஏற்று நடப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூகுள், கடந்த 2014-ம் ஆண்டு ரஷ்ய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, 5 சதவீத பயனர்களின் விவரங்களை கொடுத்துள்ளோம். மேலும், பாதுகாப்பு தொடர்பான அனைத்து சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டே நாங்கள் செயல்பட்டு வருகின்றோம். என்று தெரிவித்துள்ளது.

Related Post