வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஐ.நா விசாரணைப் பொறிமுறைக்குள் உள்வாங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட முஸ்லிம் மஜ்லிஸ் பிரகடனமும் கவனயீர்ப்புப் போராட்டமும் இன்று(04) பல்கலைக் கழகத்தின் ஒலுவில் வளாக முன்றலில் இடம்பெற்றது.
இக்கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது வட புல முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் இலங்கை முஸ்லிம்களின் ஒட்டு மொத்த சுயநிர்ணய உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்திய வாசகங்கள் பொதிந்த பதாதைகளை மாணவர்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓலுவில் வளாகத்திலிருந்து அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதனால் பிரதான வீதியின் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டது.
‘வேண்டாம் வேண்டாம் பிரிவினை வேண்டாம்;’ ‘வேண்டாம் வேண்டாம் புறக்கணிப்பு வேண்டாம்‘ ‘முஸ்லிம் தலைமைகளே ஒன்றுபடு‘ ‘முஸ்லிம் சமூகமே கைகொடு‘ ‘முஸ்லிம் தலைமைகளே சாக்குப்போக்குச் சொன்னது போதும் விழித்தெழு‘ ‘ஐ.நாவே அவசியம் வேண்டும் அவசரமாய் ஒரு தீர்வு‘ ஆகிய வாசகங்களை தாங்கியவாறு மாணவர்கள் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இக்கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் மூன்று மொழிகளிலும் கீழ்வரும் தீர்மானங்கள் பிரகடனமாக நிறைவேற்றப்பட்டது. அவையாவன, யுத்தக் குற்றம் நீதிமன்ற விசாரணைகளில் முஸ்லிம்களின் இழப்புக்களையும் பாரபட்சமின்றி உள்வாங்கும் பொருட்டு விசாரணைக்காலத்தினை 2001இல் இருந்து 1985 வரைக்குமாக பின்னகர்த்தல் வேண்டும், கிடப்பில் போடப்பட்டிருக்கும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தையும் புனர்வாழ்வையும் துரிதப்படுத்தல் வேண்டும், இன முரண்பாட்டுத் தீர்வு முயற்சிகளில் முஸ்லிம் விவகாரங்களும் சமாந்திரமாகக் கையாளப்படல் வேண்டும், அரச நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் பாரம்பரிய நிலங்கள் மீளக் கையளிக்கப்பட வேண்டும்,முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்படும் மத கலாசார வன்முறைகளை ஐ.நாவின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். என்னும் பிரகடனம் முஸ்லிம் பாரம்பரிய தாயகம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுய நிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையில் இன முரண்பாட்டுத் தீர்வு முயற்சிகளில் முஸ்லிம்களுக்கான நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வெளியிடப்பட்டது.