எம்.எம் மின்ஹாஜ்
பொது மக்களின் பணத்தை சூறை யாடிய திருடர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எந்த தருணத்திலும் பாதுகாக்க முனைய மாட்டார். குற்றவாளிகள் தொடர்பில் சாட்சியங்களுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. காலதாமதம் ஏற்பட்டபோதிலும் நீதிமன்றமே குறித்த நபர்களை கைது செய்யும் . எம்மால் எந்த அச்சுறுத்தல்களையும் விடுக்க முடியாது. எனினும் பிரதி நீதி அமைச்சர் என்ற வகையில் இது தொடர்பில் முடியுமான அனைத்தையும நான் செய்வேன் என பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக நிலுக் ஷி விக்கிரமசிங்கவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கவில்லை .மறாக நானே அவரை நியமித்தேன் எனவும் அவர் சுட்டிகாட்டினார்.
கொள்கலன் பரிசோதனை குறித்து இலங்கை சுங்க திணைக்களத்தின் அதிகாரிகள் எவரையும் நான் அச்சுறுத்தவில்லை. சட்டத்தரணி என்ற வகையிலேயே குறித்த பிரச்சினையில் தலையிட்டேன். நான் எந்தவொரு தவறும் செய்யவில்லை. இதேவேளை எனக்கு எதிராக அரசியல் மட்டத்தில் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சாடினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சுங்கத் திணைக்களத்தினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கொள்கலன் தொடர்பில் சுங்கத்திணைக்களத்தின் அதிகாரியொருவரை அச்சுறுத்தியமை தொடர்பிலான செய்தி உண்மைக்கு புறம்பானது. இந்த விடயத்தில் நான் சட்டத்தரணி என்ற வகையிலேயே ஆஜராகினேன் .அதனை விடுத்து பிரத்தியேகமாக அச்சுறுத்தவில்லை. நைலோன் கயிறு கொள்கலன் என்னுடைய உறவினருடையதாக இருப்பினும் இந்த விடயத்தில் நான் சட்டத்தரணியாகவே ஆஜராகினேன்.
இந்த விடயத்தில் எனக்கு எதிராக சதித்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஒரு சில அரசியல்வாதிகள் என்னை இலக்கு வைத்து சூழ்ச்சி செய்கின்றனர். என்னுடைய அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே சிலர் முயற்சிக்கின்றனர். நான் எந்த சந்தர்ப்பத்திலும் சட்டவிரோதமான காரியங்களில் நான் ஈடுபட போவதில்லை.
தற்போது அனைத்து கட்சிகளின் தலைவர்களும் மக்களின் சேவையில் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். புதிய தேர்தல் முறைமை வந்தவுடன் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கோ, போதைப்பொருள் வர்த்தகத்தில் தொடர்பு பட்டவர்களுக்கோ தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலைமை ஏற்படும். ஆகவே அனைத்து அரசியல் தலைவர்களும் நியாயமான முறையில் நடக்க வேண்டும்.
எவன்கார்ட் விவகாரம்
எவன்கார்ட் தொடர்பில் நீதிமன்றம் குற்றவாளிகள் ஐந்து பேரை கைது செய்ய வேண்டும் என கோரியுள்ள நிலையில் அதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தடையாக இருப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது. குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டிய எந்தவொரு கடப்பாடும் பிரதமருக்கு கிடையாது. சட்டத்தை மதித்து செயற்பட கூடியவரே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆவார்.
பொது மக்களின் பணத்தை சூரையாடிய திருடர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எந்த தருணத்திலும் பாதுகாக்க முனைய மாட்டார். குற்றவாளிகள் தொடர்பில் சாட்சியங்களுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காலதாமதம் ஏற்பட்ட போதிலும் நீதிமன்றமே குறித்த நபர்களை கைது செய்யும் . எம்மால் எந்த அச்சுறுத்தல்களையும் விடுக்க முடியாது. தற்போது நாட்டின் அரச துறை சுயாதீனமாக்கப்பட்டுள்ளது. இதனையே அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தின் போது நாம் அவதானித்தோம்.
இருந்த போதிலும் மோசடிக்காரர்கள் கைது செய்யப்படவில்லை என்றால் பிரதமர் குற்றம் சாட்டும் அதேவேளை கைது செய்தாலும் அதற்கும் எதிர்ப்பு வெளியிடுகின்றனர். எனவே இது தொடர்பில் பிரதி நீதி அமைச்சர் என்ற வகையில் என்னால் முடியுமானவற்றை செய்ய தயார்
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு தலைவரின் நியமன விவகாரம் அத்தோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் உறவினர் என்ற வகையிலேயே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக நிலுக் ஷி விக்கிரமசிங்கவை நியமித்தார் என்ற குற்றச்சாட்டு பரவலாக சுமத்தப்பட்டு வருகிறது. எனினும் நிலுக்ஷி விக்கிரமசிங்கவை பிரதமர் நியமிக்கவில்லை மறாக நானே அவரை நியமித்தேன். இது தொடர்பில் நிலுக் ஷிவ விக்கிரமசிங்க விருப்பம் இல்லாமலேயே இருந்தார். எனினும் இவர் நீதியான முறையில் செயற்பட கூடியவர் என்பதனாலேயே நியமித்தோம் என்று தெரிவித்தார். .