அமைச்சர் ரிசாதின் அமைச்சுக்குள் பொதுபலசேனா அத்துமீறி நுழைந்தது தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று (30) இடம்பெற்ற போது ,பொலிஸ் அதிகாரிகளின் கருத்துக்களுக்கு சட்டத்தரணிகள் கடும் அதிருப்தியை வெளியிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் உயர் அதிகாரிகளை சாட்சிகளாக வைத்து தேரர்களை கைது செய்யுமாறு இதன் போது சட்டத்தரணிகள் நீதிபதியை கேட்டுக் கொண்டனர்.
கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது – ‘அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்த பொதுபலசேனா அமைப்பின் தேரர்கள் இது வரை அடையாளம் காணப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக சிங்கள தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பப்பட்ட வீடியோ காட்சிகள் மொரட்டுவ பல்கலைக்கழக ஆய்வகத்திற்கு உண்மை நிலையை கண்டறியும் பொறுட்டு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிசார் கடைசியாக நடந்த விசாரணையின் போது தெரிவித்திருந்தமை தொடர்பில் இன்றைய விசாரணையின் போது சுட்டிக்காட்டப்பட்டது.
இதன் போது கடும் அதிருப்தியை வெளியிட்ட சிரேஷ்ட சட்டத்தரணிகளான சிராஸ் நூர்த்தின் மற்றும் மைத்திரி குணரத்ன ஆகியோர், பொலிஸ் உயர் அதிகாரிகள் முன்பாகவே பொதுபலசேனாவி;ன் அத்துமீறல் இடம்பெற்றுள்ளது. எனவே அவர்களை சாட்சிகளாக வைத்து தேரர்களை கைது செய்யுமாறு நீதிபதியை வேண்டி நின்றனர்.
அத்துடன், அத்துமீறி நுழைந்த சம்பவத்துடன் தொடர்புடைய சுமங்கல தேரரின் பெயரும் இதன் போது நீதிபதிக்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன் அவர் தொடர்பான 07 மில்லியன் ருபாய் பண மோசடி வழக்கு குறித்தும் நீதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நீதிபதி நவம்பர் மாதம் 27 ம் திகதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்ததுடன் அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய தேரர்களை இனம்கண்டு அவர்களின் பெயர்ப்பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பி;க்கும் படி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணையின் போது அமைச்சர் ரிசாத் பதியுதீனும் நீதிமன்றத்திற்கு சமூகம் அளித்திருந்தார்.
இதன் பிற்பாடு நீதிமன்றத்தை விட்டு வெளியேறி கருத்து தெரிவித்த அமைச்சர், பொதுபலசேனாவுக்கு சார்பாக பொலிசார் செயற்படுகின்றனர் என்பது தெளிவாக தெரிகின்றது. பகிரங்கமாக பலர் முன்னிலையில் நடந்த குறித்த அத்துமீறிய சம்பவத்தில் தொடர்புடையோரை இது வரை பொலிசார் கைது செய்யாமல் இருப்பது என்பது அவர்களது பக்கச்சார்புக்கு சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது என்றார்.