Breaking
Mon. Dec 23rd, 2024

பொதுபலசேனாவினால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை விசாரிக்க ஒரு ஆணைக்குழு நியமிக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது.

 அத்துடன் ஜாதிகபலசேனாவினால் கடந்த புதன்கிழமை கொழும்பு நிப்போன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டை பொதுபலசேனா அமைப்பு குழப்பியதற்கும் அக்கட்சி கண்டணம் வெளியிட்டுள்ளது.

 இனங்களிடையே புரிந்துணர்வையும் சேர்ந்து வாழ்தலையும் தனது நோக்காகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜாதிகபலசேனா என்ற அமைப்பினால் கொழும்பு கொம்பனித் தெருவிலுள்ள நிப்போன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டை குழப்பிய பொதுபலசேனாவின் அடாவடித்தனமானதும் நேர்மையற்றதுமான செயற்பாட்டை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

 இது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 “இக்குழப்பமானது ஊடகவியலாளர் கருத்தரங்கின் ஏற்பாட்டுக்குழுவினரின் பேரில் சமூகமளித்திருந்த சட்டத்தின் பாதுகாவலர்களுக்கும் அவர்களது கௌரவத்திற்கும் பங்கம் விளைவிக்கும் விதத்தில் அமைந்திருந்தது. அக்குழப்பக்காரர்கள் அந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டின் ஏற்பாட்டாளர்களை மிரட்டியதுடன் சட்டத்தையும் ஒழுங்கையும் மதியாது அந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டை கைவிடுவதற்கு கட்டாயப்படுத்தியதுடன் மன்னிப்புக் கேட்குமாறும் பயமுறுத்தி நிர்ப்பந்தித்துள்ளனர்.

 எங்கள் தாய் நாட்டின் புனித புத்த மதத்தின் காவலர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு சட்டத்தின் பாதுகாவலர்களை அவமதித்துத் திரியும் தீவிரவாதிகளை மட்டுப்படுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்துமாறு அரசாங்கத்தையும் சட்டத்தின் காவலாளர்களையும் இத்தால் கேட்டுக்கொள்கிறோம்.

 கடந்த இரண்டு வருடங்களாக தறிகெட்டுத்திரியும் பொதுபலசேனா இயக்கம் இந்நாட்டில் சமாதானத்துடன் வாழும் சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை குறிவைத்து தாக்கிவருகிறது. இந்த இயக்கத்தின் இக்கொடூர செயற்பாட்டை நிறுத்தத் தவறிய சட்டப் பாதுகாவலர்களின் ஏனோ தானோ என்ற அசமந்தப் போக்கு பொதுபலசேனா உறுப்பினர்களுக்கு தைரியமளித்து ஊடகவியலாளர்கள் முன்னிலையிலும் நிலைகெட்டு தாண்டவமாட வழி செய்துள்ளது.

 இலங்கை வரலாற்றில் முஸ்லிம் சமூகமானது ஒரு தேசப்பற்றுள்ள சமூகமென்று நிரூபித்துள்ளது. ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் பலவந்தமாக அவர்களது பரம்பரை கிராமங்களிலிருந்தும் இருப்பிடங்களிலிருந்தும் இரண்டு மணித்தியாலங்களில் அவர்கள் வாழ்ந்த பிரதேசத்திலிருந்து 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டதும் மேலும் காத்தான்குடி பள்ளிவாயிலிலும் ஏறாவூரிலும் பொலநறுவை, அலிஞ்சிப்பொத்தான கிராமத்திலும் முஸ்லிம்கள் மிக மோசமான முறையில் படுகொலைசெய்யப்பட்டனர்.

 விடுதலை புலிகளின் ஈழ நாடு கோரிக்கைக்கு ஆதரவு வழங்காமையும் அவர்கள் தாய்நாட்டின் மீது கொண்ட பற்றுமே இதற்கான காரணமாகும். இந்த நாட்டில் 2009ஆம் ஆண்டில் சமாதானம் உதயமானபோது மற்ற சமூகங்களைப் போன்றே முஸ்லிம் சமூகமும் அதன் பலன்களை அனுபவிக்க ஆர்வமாக இருந்தது. முஸ்லிம் சமூகத்தின் இந்தக் கனவுகள் பொதுபலசேனாவினால் ஏற்படுத்தப்பட்ட துவேச உணர்வுகளாலும் மனவேதனையாலும் கவலையாலும் தூள் தூளாக்கப்பட்டுள்ளது.

 பல ஆண்டுகளாக செயல்முறையிலிருந்த ஹலால் உறுதிப்படுத்தும் சான்றிதழை தடை செய்ய வேண்டுமென்ற கோசத்தின் மூலம் பொதுபலசேனா அமைப்பு அதன் பகிரங்க பிரவேசத்தை ஆரம்பித்தது. மனித பண்பாடுகளுக்கு ஒவ்வாத வார்த்தைகளால் மிக உயர்ந்த சமய அமைப்பான ஜம்மியதுல் உலமா மீது வீசியெறிந்தது. இந்த நச்சுத்தன்மையான இழிவான செயலானது இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் மனதை எளிதில் பாதிக்கக்கூடியதாக இருந்தது.

முஸ்லிம் சமூகத்தின் மீதான இந்த பொதுபலசேனாவின் முடிவில்லாத தாக்கம் பல விதமான முறையில் செயல்படுத்தப்பட்டது. இதில் ஒன்றுதான் கௌரவமான முஸ்லிம் பெண்களின் ஆடைகளைப் பரிகசிப்பது, பள்ளிவாயில்களைத் தாக்குவது, முஸ்லிம் வியாபாரஸ் தளங்களைத் தாக்குவது போன்ற செயற்பாடுகளும் மற்றும் அல்குர்ஆன் சட்டப்படி முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுக்கு கொடுக்கும் உணவில் துப்புவது போன்ற பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுவதுமாகும்.

 நீண்ட கால இனங்களுக்கிடையான மோதல் ஒரு முடிவுக்கு வந்ததும் அதை தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து இவ்வகையான பொய்களை கட்டவிழ்த்து விடுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதும் இதன் பிண்ணனியில் உள்ள நோக்கமும் பதில் காண முடியாத கேள்வியாக மாறியுள்ளது.

 இந்த நாட்டில் நாம் கஷ்டப்பட்டு பெற்ற சமாதானத்தை சீர்குலைப்பதற்காக ஒரு மறைமுக சக்தி பின்னணியில் இருக்குமோ என சந்தேகிக்கவும் முடிகிறது. விடுதலை புலிகளின் காலத்தில் நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் மிக இலகுவான முறையில் எந்தக் கேள்வியுமில்லாமல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றதைப் போன்று அதற்கு சமமாக இப்போழுது பொதுபலசேனா செயற்படுகிறது என்பது எல்லோர் மனதிலும் ஒரு கேள்வியாக பதிலை எதிர்பார்த்திருக்கிறது.

விடுதலை புலிகளின் அதிகாரம் வட கிழக்கு மாகாணங்களில் மட்டுமே நீடித்திருந்தது. ஆனால் இங்கு பொதுபலசேனா தங்களது அதிகாரங்களை முழு இலங்கைத் தீவிலுமே செலுத்துகிறது. சில நாட்களுக்கு முன்பு பொதுபலசேனா வட மாகாணம் சென்று அங்குள்ள அரச அதிகாரிகளையும் பல துன்பங்களுக்கு ஆளாக்கி அங்கு வாழ்ந்துவரும் முஸ்லிம்களையும் மிகவும் கடுமையாக முறையற்ற வார்த்தைகளால் பழித்திருப்பதும் மிகவும் கௌரவமான மதகுருமார்களுக்கு மட்டுமல்ல.சாதாரண மக்களுக்கும் ஒவ்வாத ஒரு செயலாகும். ஆகக்குறைந்தது விடுதலை புலிகளின் பயங்கரவாத ஆட்சி சட்டத்தை பாதுகாப்போரால் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பொதுபல சேனாவின் அதிகாரங்கள் சட்டத்துக்கு மேம்பட்டதாக தென்படுகின்றது.

ஆகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சட்டத்தையும் ஒழுங்கையும் எல்லோருக்கும் சமமாக அமுல்படுத்தும்படியும் யுத்த முடிவுக்கு பின்னார் பொதுவாக சிறுபான்மை சமூகத்துக்கும் குறிப்பாக முஸ்லிம்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளை விசாரிக்க ஒரு ஆணைக்குழு நியமிக்கும்படியும் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது. அத்துடன் இந்த புதுவருடத்தில் எல்லா சமூகங்களுக்கும் இந்த நாட்டின் சமாதானத்தை பயனுள்ளதாக ஆக்கும்படியும் கேட்டுக்கொள்கிறது”.

Related Post