Breaking
Mon. Dec 23rd, 2024

அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விடயம் தொடர்பில் மன்னிப்புக் கோரும் பொதுபலசேனாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பொதுபல சேனாவினர் தலைக்கனம் கொண்டு அடாவடித்தனங்களை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.

அரசாங்க உயர்மட்டமும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த காரணத்தினால் அவர்களின் அத்துமீறல்கள் கட்டுக்கடங்காமல் இருந்தது.

இந்நிலையில் இனவாத பொதுபலசேனாவின் செயற்பாடுகளை கண்டித்த வட்டரெக விஜித தேரரை ஒளித்து வைத்திருப்பதாக கூறி பொது பல சேனாவினர், றிஷாத் பதியுதீனின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு அலுவலகத்தினுள் புகுந்து அடாவடித்தனம் மேற்கொண்டிருந்தனர்.

வழக்கம் போன்று இந்த விடயத்திலும் அரசாங்க உயர்மட்ட ஆசீர்வாதத்துடன் பொலிசார் வேடிக்கை பார்த்திருக்க, சட்டத்தரணிகள் குழுவொன்று நியாயம் கோரி நீதிமன்றத்தை நாடியது.

தற்போது தமக்கு ஆதரவான முன்னைய அரசாங்கம் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ள நிலையில், பொது பல சேனாவினர் பெட்டிப்பாம்பாக அடங்கிப் போயுள்ளனர்.

இந்நிலையில் றிஷாத்தின் அமைச்சு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தமை தொடர்பிலான வழக்கு நேற்று கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வேறு வழி தெரியாத நிலையில், நடந்த சம்பவம் குறித்து தாங்கள் பகிரங்க மன்னிப்புக்கோரத் தயாராக இருப்பதாக பொதுபல சேனா பிக்குகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

எனினும் அதனை நிராகரித்த நீதிபதி பாலித லியனகே, சட்டவிரோதமான முறையில் ஒன்றுகூடியமை மற்றும் அத்துமீறி அரச அலுவலகத்துக்குள் நுழைந்தமை மன்னிக்க முடியாத குற்றங்கள் என்று கடுமையாக தெரிவித்திருந்தார்.

அத்துடன் நேற்றைய தினம் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காத இரண்டு பிக்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

இதன் காரணமாக கடும் நெருக்கடிக்குள்ளான பொதுபல சேனாவின் பிக்குமார்கள் நால்வரும் றிஷாத் பதியுதீன் தரப்பு சட்டத்தரணி மைத்திரி குணரத்தின மற்றும் சிராஸ் நூர்தீன் ஆகியோரிடம் வழக்கை சமரசமாக முடித்துக் கொள்ள சம்மதிக்குமாறு கெஞ்சிக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

வழக்கின் அடுத்த தவணை விசாரணை எதிர்வரும் அக்டோபர் 1ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Post