-ஷெஹான் சாமிக்க சில்வா –
பொதுபல சேனாவுக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு வழக்குகளும் எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது, புனித குர்ஆனை அவமதித்தமை மற்றும் ஜாதிக பல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்த விடாமல் தடையாக இருந்தமை போன்ற இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கே, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் நேற்று வியாழக்கிழமை (14) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழங்குகள் தொடர்புடைய விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அது தொடர்புடைய முடிவு, சட்டமா அதிபரின் கருத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றைய வழக்கு விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் முதலாவது வழக்கில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மாத்திரமே சந்தேகநபராக கருதப்படுவதாகவும் மற்றைய வழக்கில், அவருடன் இன்னும் சில தேரர்கள் சந்தேகநபர்களாக கருதப்படுவதாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.