இவ்வாரம் முதல் ஆரம்பமான சட்டவிரோத ஆயுதங்களை உரிய முறையில் அரசாங்கத்திடம் கையளிப்பதற்கான பொது மன்னிப்பு காலம் சிறந்த பெறுபேறுகளை அடைந்துள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி முடிவடையவுள்ள இப்பொது மன்னிப்புக் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் தம் வசம் வைத்திருக்கும் ஆயுதங்களை அண்மையிலுள்ள பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகத்தில் கையளிக்க முடியும். இந்த பொது மன்னிப்பு காலப்பகுதிக்குள் சட்டவிரோத ஆயுதங்களை கையளிப்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படவோ அல்லது தண்டப் பணம் அறவிடப்படவோ மாட்டாது. இதற்கு மேலதிகமாக
• சன்னத்துப்பாக்கி அல்லது அதற்கு சமமான ஆயுதங்களை (கல்கடஸ்/கட்டுத்துபாக்கி ) கையளிப்பவர்களுக்கு 5000 ரூபாவும்
• பிஸ்டல்/ரிவால்வர்களை கையளிப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவும்
• ரீ-56 ரக ஆயுதங்களை கையளிப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாவும் சன்மானமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொது மன்னிப்பு காலம் முடிவடையவுள்ள மே மாதம் 6 ஆம் திகதியின் பின்னர் சட்ட விரோத ஆயுதங்கள் வைத்திருப்பவர்களை கைது செய்யும் வகையில் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. சட்டவிரோத ஆயுதங்களை தம் வசம் வைத்திருப்பவர்கள் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலத்தை பயன்படுத்தி அவற்றினை கையளிப்பதன் மூலம் சமூகத்தின் சமாதான மற்றும் சகவாழ்வை உறுதி செய்ய அரசாங்கத்திற்கு உதவுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.