பொதுமன்னிப்பு காலவேளையின் போது முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற சுமார் 14000 படைவீரர்கள் உத்தியோகபூர்வமாக சேவையிலிருந்து நீங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேவையை கைவிட்டு தப்பிச் சென்ற முப்படையினர் மீண்டும் சேவையில் இணைந்து கொள்ள வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் நாளை(13) யுடன் நிறைவடையவுள்ளது. அதற்கமைய நேற்று முந்தினம் (11) ஆம் திகதி வரையில் 12,347 இராணுவ வீரர்களும், 544 விமானப்படை வீரர்களும் 756 கடற்படை வீரர்களும் சட்டரீதியாக சேவையிலிருந்து விலகியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
உத்தியோக பூர்வ விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இராணுவ வீரர்கள் அவர்கள் பணியாற்றிய இராணுவ படைப்பிரிவுக்கும், விமானப்படை வீரர்கள் விமானப் படை தலைமையகத்துக்கும், கடற்படை வீரர்கள் வெலிசறை கடற்படை முகாமிற்கும் சேவை அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் இரு நகல் பிரதிகள் சகிதம் வருகை தருமாறு வேண்டப்பட்டுள்ளது.
இதேவளை பொது மன்னிப்பு காலத்தினைப் பயன்படுத்தி சட்டரீதியாக சேவையிலிருந்து விலக தவறும் படை வீரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.