பாராளுமன்றத்தில் பொது எதிரணியின் பலம் தேய்வடைந்து வருகின்றது. இதன்படி மேலும் பலர் விரைவில் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக பொதுநிர்வாக மற்றும் அரச முகாமைத்துவ அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார்.
மேலும் சாவகச்சேரியில் மீட்கப்பட்ட ஆயுதம் தொடர்பில் மாயை உருவாக்க முனைகின்றனர். பொது எதிரணியின் தேவைக்கு ஏற்றால் போல் விசாரணைகளை நாம் நடத்தபோவதில்லை. தேசிய ஆடையுடன் அன்றி கோர்ட் சூட் அணிந்து ஜெனீவா சென்ற பொது எதிரணியின் செயல் வெட்க கோடானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய அரசாங்கத்திற்கு எதிராக செய்றபட்டு வரும் பொது எதிரணியினரின் செயற்பாடுகள் தோல்வி அடைந்த வண்ணமுள்ளன. இதன்படி மக்கள் மத்தியில் தேவையற்ற முறையில் பீதியை ஏற்படுத்தி வருகின்றனர். தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலில் என்று கூறிவருகின்றனர். யுத்தம் நிறைவடைந்து முப்பது வருடங்களாகியுள்ளன. இதன்படி வடக்கு பகுதிகளில் ஆயுதங்கள் மீட்பது சகஜமாகிவிட்டது. அதுபோன்றே சாவகச்சேரியில் மீட்கப்பட்ட ஆயுதத்தை வைத்து பொது எதிரணியினர் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் பொது எதிரணியினர் தேவைக்கு ஏற்றால் போன்று விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நாம் தயாரில்லை.
ஆரம்பத்தில் ஜெனீவாவை கேவலமாக கருதிய பொது எதிரணியினர் தற்போது தேசிய ஆடைகளை விட்டு அதற்கு பதிலாக கோட்சூட் அணிந்து ஜெனிவா செல்கின்றனர். இது மிகவும் வெட்க கேடான செயலாகும்.
இந்நிலையில் தற்போது பொதுஎதிரணியின் செயற்பாடுகள் பாராளுமன்றத்தில் தேய்வடைந்து வருகின்றன. எதிரணியின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றது. நேற்று முன் தினம் மூன்று பேர் தேசிய அரசாங்கம் ஆதரவு வழங்க முன்வந்தனர். இது போன்று இன்னும் பலர் விரைவில் எம்முடன் இணைந்து கொள்ளவுள்னர். இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கட்சி மறுசீரமைப்பு
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஏனையவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னர் முன்னெடுக்கப்படும். யாப்பில் பல்வேறு சீர்த்திருத்தங்களை செய்யப்படும் என்றார்.