பொதுமக்கள் சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக பொது மன்னிப்புக் காலம் இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் நேற்று (6) அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25ம் திகதி முதல் மே மாதம் 5ம் திகதி வரையில் ஆயுதங்களை ஒப்படைக்க முடியும் என தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் உரிய அனுமதி பத்திரம் எதுவுமின்றி ஆயுதங்களை வைத்திருக்கும் நபர்கள் அந்த ஆயுதங்களை பொலிஸ் நிலையங்கள் அல்லது பிரதேச செயலகங்களில் ஒப்படைக்க முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், பொது மன்னிப்புக் காலத்தில் ஒப்படைக்கப்படாத ஆயுதங்கள் அதன் பின்னர் அபகரிக்கப்படுவதுடன் அதற்கான விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொது மன்னிப்புக் காலத்தில் தம்மிடவுள்ள சட்ட விரோத ஆயுதங்களை ஒப்படைப்பவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாது எனவும் குறிப்பிடப்படுகின்றது.
சட்டவிரோத ஆயுத பயன்பாட்டினால் ஏற்பட்டு வரும் பாதக விளைவுகளை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.