ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நியமனம் சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை, உயர்நீதிமன்றம், நேற்றுச் செவ்வாய்க்கிழமை(24) தள்ளுபடி செய்தது. சரத் பொன்சேகாவின் நியமனம் மற்றும் அந்த பதவியிலிருப்பது சட்டவிரோதமானது என்றும், அப்பதவியில் தொடர்ந்திருந்து செயற்படுவதைத் தடுக்குமாறு, இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, மாற்றுக் கொள்கைளுக்கான நிலையத்தின் சார்பில், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் பாக்கியசோதி சரவணமுத்துவினால், பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பிரதம நீதியரசர் கே.ஸ்ரீவன் மற்றும் நீதியரசர்களான சிசிர ஜே. அப்று, நலின் பெரேரா ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாமே இம்மனுவைத் தள்ளுபடி செய்தது.
சட்டத்தரணி விராத் கோரயாவின் ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மனுவில், சபாநாயகர் கரு ஜயசூரிய, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம், தேர்தல்கள் திணைக்களத்தின் ஆணையாளர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க, சட்டமா அதிபர் உள்ளிட்ட எண்மர் குறிப்பிடப்பட்டிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியலின் பிரகாரம், அந்தப் பட்டியலில் உள்ளடக்கப்படாத சரத் பொன்சேகாவை நியமித்தமை, மக்களின் இறையாண்மையை மீறுதல் மற்றும் அரசியலமைப்பை மீறுவதாக அமைந்துள்ளது என்று மனுதாரர், தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.