புதிய அரசியலமைப்பினால் இலங்கையில் பௌத்த தர்மத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதலிடமோ ஒற்றையாட்சிக்கோ எதுவிதமான பாதிப்பும் ஏற்படாது. இலங்கை வரலாற்றில சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள முதலாவது புதிய அரசியலமைப்பாக இது அமையும் என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
பிட்டகோட்டேயிலுள்ள ஐ.தே.கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்
மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சபை முதல்வரும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
அரசாங்கம் தற்போது புதிய அரசியல மைப்புக்கான தீர்மானத்தையே முன்வைத் துள்ளது. இது தொடர்பில் சிறி லங்கா சுதந்திரக்கட்சியின் சிலர் மற் றும் தினேஷ் குணவர்த்தன எம்.பி. ஆகியோர் திருத்தங்களை முன்வைத்துள்ளனர். ஏனைய கட்சிகளும் தமது திருத்தங்களை
முன்வைக்க முடியும்.
1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பும் வெ ளிப்படைத் தன்மையாக விவாதிக்கப்படவில்லை. இது தொடர்பாக யோசனைகள் கொழும்பு றோயல் கல்லூரி நவரங்கஹல மண்டபத்திலேயே விவாதிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான கடிதங்களை அன்று மஹிந்த ராஜபக்ஷவே அனுப்பி வைத்தார். மக்கள் கருத்துக்கள் பெறப்படவில்லை.
அதேபோன்று 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பும் தெரிவுக்குழு மட்டத்திலேயே விவாதிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படவும் இல்லை. விவாதிக்கப்படவும் இல்லை. மக்களின் கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்படவும் இல்லை.
இந்நிலையில் ஒரு சிலர் புதிய அரசியலமைப்புக்காக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் சட்டவிரோதமென்கிறார்கள். இது சட்டவிரோதமானதல்ல. 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 82ஆவது ஷரத்திற்கமையவே அரசினால் பாராளுமன்றத்தில் தீர்மானம் முன் வைக்கப்பட்டுள்ளது.
1978 அரசியலமைப்பின் அடிப்படையிலேயே அனைத்தும் முன்னெடுக்கப்படும். தற்போது நாம் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றி அனைவரது கருத்துக்களையும் திருத்தங்களையும் பெற்றுக்கொள்ளவுள்ளோம்.
கடந்த காலங்களைப் போல் அறைக்குள் பேசும்போது ஒரு கருத்தைக் கூறி விட்டு வெளியில் வந்து வேறொரு கருத்தைக் கூற முடியாது. அனைத்தும் வெளிப்படைத் தன்மையாகவே அமையும். எமக்கு மறைப்பதற்கு எதுவும் கிடையாது.
பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தமது கருத்துக்களை வெளிப்படையாக வெளியிட முடியும். அதேவேளை புதிய அரசியலமைப்பு தொடர்பில உயர் நீதிமன்றம் தனது வியாக்கியானத்தைக் கூற வேண்டும். அதனை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் அதற்கான மக்கள் பங்களிப்பு முழுமையாக இருக்கும். உதாரணமாக இந்தியாவின் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதம நீதியரசரை நியமிக்கும் போது ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனைகளை பெற வேண்டும்.
இது தொடர்பில் அண்மையில் பிரதமரின் ஆலோசனையை மட்டுமல்ல விருப்பத்தையும் பெற வேண்டுமென இந்திய உயர் நீதிமன்றம் இவ்விடயத்தில் தலையிட்டு தீர்ப்பளித்துள்ளது. இது போன்றதொரு நிலைமை இங்கும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
கடந்த கால ஆட்சியில் 18ஆவது திருத்தம் தன்னிச்சையாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் பெற்றுக் கொள்ளப்படவில்லை.
இதனால் சுயாதீன ஆணைக்குழுக்கள் அனைத்தும் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் வந்தன. எனவே புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்துக்கள் கேட்கப்படும். அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்படும். அதுமட்டுமன்றி இறுதியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்களின் விருப்பு பெற்றுக்கொள்ளப்படும்.
மக்களின் தீர்மானமே இறுதித் தீர்மானமாக அமையும். எனவே இலங்கை வரலாற்றில் அரசியலமைப்புக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் அரசியலமைப்பாக புதிய அரசியலமைப்பு அமையும்.
தேசிய பிரச்சினை உட்பட நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கான இறுதி சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனாதிபதியாகவுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக உள்ளார். இவ்வாறு நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கும் சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது. இது போன்றதொரு சந்தர்ப்பம் இனிமேல் ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை.
எனவே இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அனைத்து கட்சிகளினதும் கருத்துக்களை பெற்றுக்கொண்டு நாட்டுக்கு உகந்த அரசியலமைப்பை ஏற்படுத்துவோம்.
புதிய அரசியலமைப்பு தொடர்பான தீர்மானமே தற்போது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் தமது கருத்துக்களையும் திருத்தங்களையும் முன்வைக்க முடியும். விவாதிக்க முடியும். அனைத்தும் வெளிப்படைத்தன்மையாகவே அமையும். எதுவுமே இரகசியமாக மேற்கொள்ளப்படமாட்டாது.
அத்தோடு புதிய அரசியலமைப்பினால் பௌத்த தர்மத்திற்கு எதுவிதமான பாதிப்பும் ஏற்படாது. அதேபோன்று இலங்கையின் ஒற்றையாட்சிக்கும் பாதிப்பு ஏற்படாது.
எனவே வடக்கு மற்றும் தெற்கிலுள்ள அடிப்படை வாதிகளின் பொய்ப் பிரசாரங்களுக்கு மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. நாட்டின் எதிர்கால சந்ததியினரின் வளமான வாழ்க்கை மற்றும் நாட்டை கட்டியெழுப்பும் நோக்கிலேயே நாம் அனைத்தையும் மேற்கொள்கின்றோம் என்றார்.